ஈரானின் 3 கப்பல்களை அமெரிக்கா அழித்தது: பதிலுக்கு ஈரானும் 6 கப்பல் மீது தாக்குதலை நடத்தியது!
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
ஈரான் அமெரிக்காவின் போர்க் கப்பல் மீது இரு ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்ததை அடுத்து ஈரானின் கார்க் தீவின் கடற்கரைக்கு அப்பால் இருந்த ஐஆர்ஜிசி-யின் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் எம்/டி டவுனி மற்றும் ஜாஸ்க் அருகே இருந்த எம்/டி ஸ்டார்க் 1 ஆகிய கப்பல்களை சென்ட்காம் நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்தது என சென்ட்காம் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.
ஓமான் வளைகுடாவில், சரக்குகள் ஏதுமின்றி இருந்த எம்/டி கைலோ என்ற கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலையும் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக அழித்தன. கப்பலைக் கைவிடுமாறு மாலுமிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட பின்னரும், அக்கப்பலின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி, அதனைச் செயல்படாதவாறு செய்தன.
தெஹ்ரானால் அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாக ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய்க் கப்பல்கள் மீதும், மற்ற பகுதிகளில் இருந்த மேலும் மூன்று கப்பல்கள் மீதும் பதிலடித் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.

Post a Comment