தொடரும் போராட்டம்!
வலிகாhமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 20 ஆவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வலி. வடக்கு மக்கள் 36 வருடங்களாகத் தமது சொந்த நிலங்களை மீளப்பெற முடியாமலே அகதி வாழ்வை தொடர்கின்றனர்.
1990 ஆம் ஆண்டு யூன் மாத காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படையினர் வெளியேறாமல் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணி வருகின்றனர்.
பல தசாப்தங்களாகக் கோரிக்கைகள் விடுத்தும் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நில உரிமையாளர்கள் தீர்மானித்திருந்தனர். அதற்கமைய, இன்றைய தினமும் இராணுவத்தின் கொமாண்டோ பங்களா முன்பாக ஒன்றுதிரண்ட மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு நீதிகோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment