கௌதாரிமுனையில் காப்பாற்றப்பட்ட காணிகள்!
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மோசடியாக பூநகரியின் கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் வழங்கப்பட்ட விற்பனை செய்யப்பட்ட காணிகளை மீள பறிமுதல் செய்வதென கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுககூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நபர்களிற்கு மோசடியாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அக்காணிகள் விற்பனை செய்வது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அம்பலமாகியிருந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்காக விசேடமாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் அழைக்கப்பட்டிருந்தார். பளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. குறிப்பாக, கடந்தகாலப் போர்ச் சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த காணிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் உள்ளுர் மக்களுக்கு உரிய ஆவணங்களை வழங்கும் நடைமுறை தொடர்பிலும், உரிய அனுமதியின்றி காணிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை மீளாய்வு செய்வது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (04.09.2026) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மோசடியாக பளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக பூநகரியின் கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உள்ளுர் மக்களது முறைப்பாடுகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்து.
முன்னைய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் காணிகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதனை மறுதலித்த உள்ளுர் ஆணைக்குழு அதிகாரிகள் அவை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் நேற்றைய கூட்டத்தில் கொழும்பிலுள்ள தலைமையகத்தினால் கௌதாரிமுனை வெட்டுக்காடு பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமையகத்தினால் 60 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே உள்ளுர் மக்களிற்கு பகிரப்பட்ட காணிகளை மீள அவர்களிற்கு வழங்க ஏதுவாக பறிமுதல் செய்வதென காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளரால் உறுதி மொழி வழங்கப்பட்டதுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று உள்ளுர் மக்களிற்கே பளை மற்றும் பூநகரியிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகள் வழங்கப்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment