பிரான்ஸ் ரெனுவா அருங்காட்சியகத்தில் ஓவியங்கள் கொள்ளை: இரு கொள்ளையர்கள் தப்பியோட்டம்


கேன்ஸ்-சுர்-மெர்: பிரெஞ்சு ரிவியேராவில் உள்ள கேன்ஸ்-சுர்-மெர் நகரில் அமைந்துள்ள ரெனுவா அருங்காட்சியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த இரு கொள்ளையர்கள், நான்கு கலைப்படைப்புகளைத் திருடிச் சென்ற நிலையில், அவற்றில் இரண்டு ஓவியங்களைத் தப்பிச் செல்லும்போது கைவிட்டதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

காலை 6 மணிக்கு சற்று முன்னதாக அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த இரு திருடர்களும், சுமார் 9 மில்லியன் யூரோ மதிப்புடைய நான்கு கலைப்படைப்புகளை எடுத்துச் சென்றதாக மேயர் பிரையன் மாஸன் தெரிவித்தார்.

நகரின் வீடியோ கண்காணிப்பு காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு அவர்களைத் துரத்திச் சென்றனர். எனினும், இருவரும் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் செல்லும் போது திருடப்பட்ட ஓவியங்களில் ஒன்றை அவர்கள் கைவிட்டுச் சென்றதாக மேயர் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு கலைப்படைப்புகள் தற்போது காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருடப்பட்டதாகக் கூறப்படும் கலைப்படைப்புகளின் முழுமையான விவரங்கள் மற்றும் அவற்றின் அடையாளங்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக தகவல் வெளியிடவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கொள்ளைச் சம்பவம், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் முக்கியமான கலை மற்றும் கலாச்சாரச் சொத்துத் திருட்டுகளுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

ரெனுவா அருங்காட்சியகம், பிரபல பிரெஞ்சு இம்ப்ரஷனிஸ்ட் ஓவியரான பியர்-அகஸ்ட் ரெனுவார் தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளைக் கழித்த முன்னாள் இல்லம் மற்றும் கலைக்கூடத்தில் அமைந்துள்ளது.

தோட்டங்கள் மற்றும் ஆலிவ் மரங்களால் சூழப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம், ரெனுவாரின் வாழ்க்கை மற்றும் கலைப் பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட கலைப்படைப்புகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments