யேர்மனியின் மின்சார வலையமைப்பில் தொடர் நாசவேலை: சந்தேக நபர் கைது


யேர்மனியின் மின்சார வலையமைப்பை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான நாசவேலைத் தாக்குதல்களை நடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயது நபர் ஒருவரை யேர்மனிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பல நாட்களாக அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர், மேற்கு யேர்மனியில் ஆச்சென் நகருக்கு அருகிலுள்ள வைஸ்வைலர் மின் நிலையத்தின் அருகே நடமாடியபோது கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பிராண்டன்பர்க் மற்றும் சாக்சோனி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மின்சார உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த நாசவேலை முயற்சிகள் இடம்பெற்றதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

உயர் மின்னழுத்த மின் கம்பிகளின் குறுக்கே மெல்லிய மின்கடத்தும் கம்பிகளைச் செலுத்துவதற்காக, சுயமாகத் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மின்கசிவு மற்றும் மின்சுற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

கொலோன் நகருக்கு மேற்கே உள்ள பெர்க்ஹைமில், மின் நிலையத்தின் பல்வேறு அலகுகள் பல நாட்களுக்கு செயல்படாமல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பிராண்டன்பர்க்கில் உள்ள ஜான்ஷ்வால்டே மின் நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையம் ஒன்றிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்ட சுயமாகத் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் மின்கடத்தும் பொருட்கள் மின் கம்பிகள் மீது வீசப்பட்டதாகவும், இதனால் இரண்டு மின்சுற்றுக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தச் சம்பவங்களால் பரவலான மின்தடை எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவங்களின் பின்னணி, சந்தேக நபரின் நோக்கம் மற்றும் இதற்குப் பின்னால் வேறு நபர்கள் அல்லது அமைப்புகள் உள்ளனவா என்பது குறித்து யேர்மனி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments