சவூதி அரேபியாவில் ஹூதிகள் தாக்குதல்: 73 பேர் காயம்!!


சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள நான்கு நகரங்களை இலக்காகக் கொண்டு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 73 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெஹ்ரானின் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் ஹூதிகள், சவூதி அரேபியாவின் கமிஸ் முஷைத், அப்ஹா, நஜ்ரான் மற்றும் ஜசான் ஆகிய நகரங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

சவூதி விமானப்படைத் தளம், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் இலக்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்குதலுக்கு இலக்காகியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், ஏமனின் தலைநகர் சனாவுக்கு கிழக்கே உள்ள ஜுபா மாவட்டத்தில் சவூதி போர் விமானங்கள் நான்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக செய்தி வெளியிட்டுள்ளன.

ஹூதிகளின் தாக்குதல்களுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சவூதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மல்கி தெரிவித்துள்ளார். அதேவேளை, சவூதி வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹூதி செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ எச்சரித்துள்ளார்.

இதனால், ஏமன் மற்றும் சவூதி அரேபியா இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் ஏமனின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களால் 18,500-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து ஒரு பீப்பாய் 99 டொலருக்கும் மேல் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போருக்கு முன்னதாக உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற நிலையில், அப்பகுதியில் நீடிக்கும் மோதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்துக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.

No comments