பல்லகண்டல் புனித அந்தோனியார் திருவிழா - மன்னார் புத்தளம் பாதையை ஐந்து நாட்களுக்கு திறக்க கோரிக்கை
முள்ளிக்குளம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் செல்வதற்கு வசதியான, மூடப்பட்டுள்ள மன்னார் புத்தளம் பாதையை ஐந்து நாட்களுக்கு மட்டும் திறந்து தருமாறு அப்பகுதி மக்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி முள்ளிக்குளம் பகுதியிலுள்ள ஆலயப் பாதை முன்பாக மக்கள் ஒன்றிணைந்து அமைதி வழி கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
முள்ளிக்குளம் பள்ளகண்டல் அந்தோனியாரை, இவ்வருடம் தரிசிக்க முடியாதபடி பாதை மூடப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. எங்கள் ஊர் ஆலயத்திற்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற முடியாதநிலையில் உள்ளோம்.
எமது வாழ்வாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்காவது பாதையைத் திறந்து தாருங்கள்' என கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பில் முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்பணி ரெரன்ஸ் அடிகளார் கருத்துத் தெரிவிக்கையில்,
"யுத்தத்திற்குப் பின் முள்ளிக்குளம் கிராமம் கைவிடப்பட்ட நிலையில், மக்களின் பூர்வீக நிலங்கள் கடற்படையினர் வசம் உள்ளன. மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்தாலும், இந்த ஆலயமே ஆன்மீகத் தாகத்தைத் தீர்க்கும் இடமாக உள்ளது.
தற்போது மறிச்சுக்கட்டி புத்தளம் பாதை மூடப்பட்டுள்ளதால், மக்கள் ஆலயத்திற்குச் செல்ல சுமார் 250 கி.மீ தூரம் சுற்றி, அநுராதபுரம் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
இப்பாதை வழியாகச் சென்றால் வெறும் 30 கி.மீ தூரமே ஆகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களால் இவ்வளவு தூரம் பயணம் செய்வது சாத்தியமற்றது. எனவே, மக்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற பாதை திறந்து போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment