செம்மணி அகழ்வு மீண்டும் தொடங்கியது!
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு சிறுகுழந்தைகளது எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்டத்தின் 33 ஆவது நாளான இன்றைய அகழ்வாய்விலேயே புதிதாக 2 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பன. அந்த இரண்டு எலும்புக்கூடுகளும் குழந்தைகளினுடையதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அடையாளப்படுத்தப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன் செம்மணி புதைகுழியில் மொத்தமாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக , செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
கடந்த 32 நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி, 9 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டம்பர் 3ஆம் திகதி வரை 45 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில், முதலாம் கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை உட்பட மொத்தம் 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment