மீண்டும் மீண்டும் அறளைக்கதை!
பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க கோரி 12வது வாரமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன்.
இதனிடையே இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணிகளைஇராணுவ பராமரிப்பில் இருந்து விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள 1661 ஏக்கர் காணியை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்துக்கு உரித்தாக்குவதற்கும், காணி உரிமையாளர்களுக்கு காணி அமைச்சின் ஊடாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமற்ற காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன. 2009 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்தோம். எதிர்வரும் ஓரிரு மாத காலப்பகுதியில் 243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தத்தவில்லை. அத்தியாவசிய தேவை மற்றும் பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இந்த காணிகள் பயன்படுத்தப்படுகின்றன. பலாலி விமான நிலையம் 774 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அனுர அரசின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாவட்ட செயலர்கள் மத்தியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உயர்பாதுகாப்பு வலயமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுமென கொழும்பில் அறிவித்துள்ளார்.

Post a Comment