சாவகச்சேரி சறுக்கியது!
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஞானப்பிரகாசம் கிசோர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை ஆராய்ந்த வடக்கு மாகாண மேல்நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு இடைக்காலத் தடைக்கட்டளை வழங்க மறுத்துள்ளது.
முன்னதாக, வர்த்தமானி ஊடாகத் ஆளுநர் தன்னை பதவி நீக்கம் செய்திருந்தமைக்கு எதிராக உப தவிசாளர் கிசோர், கடந்த சனிக்கிழமை வடக்கு மாகாண மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
தனிநபர் விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி க.அரியநாயகத்தின் அறிக்கை, சாவகச்சேரி நகராட்சி மன்றம் முழுவதையும் கலைக்குமாறு பரிந்துரைத்திருந்த போதிலும், அதனை மீறித் தன்னை மட்டும் ஆளுநர் பதவி நீக்கியது ஏன் என்ற கேள்வியையும், கிசோர் எழுப்பியிருந்தார்.
சட்டத்தரணி கு.குருபரனினால் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மனு இடைக்காலத் தடைக்கட்டளைக்காக நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறையீட்டாளர் சார்பில் மிக நீண்ட நேரம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், தனிநபர் விசாரணை அதிகாரி உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப இணங்கிய போதிலும், இடைக்காலத் தடைக்கட்டளையை வழங்க மறுத்துத் தீர்ப்பளித்தார்.
ஆளுநர் நடைமுறைமுறைகளைப் பின்பற்றியே முடிவுகளுக்கு வந்துள்ளார் எனவும்,இடைக்காலத் தடைகளை வழங்குவது பிழையான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவு குறித்துக் கருத்துத் தெரிவித்த முறையீட்டாளரின் சட்டத்தரணி கு.குருபரன், இடைக்காலக் கட்டளைகளை மறுத்தமைக்கான நியாயமான காரணங்கள் இன்றைய கட்டளையில் இல்லை என்பதால் இதற்கு எதிராகப் பொருத்தமான மாற்று வழிகளை தாம் நாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment