வவுனியா மாநகரசபையில் ஆளுநர் உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரயில் அவ்வாறு நடந்திருக்காமை பேசுபொருளாகியுள்ளது.இந்நிலையில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோர் சார்பில் ஆஜராகின்ற சட்டத்தரணி குருபரன் தனது விளக்கமொன்ரற பகிர்ந்துள்ளார்.
"வழமையாக விசிலடிச்சான் குஞ்சுகளின் பிதற்றலுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால் தொடர்ச்சியான பொய்கள் சமூக ஊடக உலகில் பொய்யை உண்மையாக்கி விடும் என்பதால் இந்தப் பதிவு.
சாவகச்சேரி உப தவிசாளரின் வழக்கு வவுனியா இடைக்காலக் கட்டளை வந்ததன் பின்னர் தான் தாக்கல் செய்யப்பட்டது என்பது பச்சைப் பொய். அதற்கு பல மணி நேரம் முன்னதாக அது தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கடுமையான முயற்சியின் பின்னர் தனி நபர் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தகவல் அறியும் சட்டம் மூலம் பெறும் வரை காத்திருந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு இரு வழக்குகளும் ஒரே மாதிரியானவை அல்ல. (No two cases are the same). வவுனியாவில் கொடுக்கப்பட்டது என்பதற்காக யாழ்ப்பாணத்தில் கொடுபடும் என்ற உத்தரவாதம் இல்லை. நீதிமன்றங்கள் அவ்வாறு இயங்குவதில்லை. அதை அவர் அறிவார். ஆனால் அவரின் நிழலில் இயங்கும் / அவரால் ஊக்குவிக்கப்படும் / இயக்கப்படும் / விசிலடிச்சான் குஞ்சுகளை அவர் வேண்டுமென்றே பிழையாக வழிநடத்துவது அல்லது அதைக் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் ஊக்குவிப்பது காலக்கொடுமை. எனக்கு எனது சட்டத்தொழில் அரசியல் மூலதனமில்லை. ஆகவே எனது நெஞ்சில் கனமில்லை".
இதனிடையே உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து அதனை தூக்கி வீசினார் எனும் குற்றச்சாட்டில் நகர சபையின் உபதவிசாளர் ,வடமாகாண ஆளூநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உபதவிசாளர் பதவி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவி ஆகியவை வறிதாக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளூனரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மீள பெற கோரியும் சாவகச்சேரி நகர சபையில் தீர்மானம் நிறைவேற்ற விசேட சபை அமர்வினை நேற்றைய தினம் (03-07-2026) நடத்த நகர பிதா அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த விசேட அமர்வுக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் சமூகம் அளிக்காத காரணத்தால் சபையில் கோரமின்றி சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
சாவகச்சேரி நகர சபையின் 18 உறுப்பினர்களில் குறித்த விசேட அமர்வுக்கு தமிழரசு கட்சியின் ஆறு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினருமாக 10 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
ஏனைய எட்டு உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இரண்டு உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment