பொசன் அன்னதானமும் செம்மணியும்!



இன மத நல்லிணக்கத்தை கொழும்பில் ஏற்படுத்த இம்முறையும் கொழும்பு கோஸ்டியொன்று பொசன் அன்னதான நிகழ்வொன்றை ஆலய முன்றலில் இன்று நடாத்தியுள்ளது.

மறுபுறம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள அணையா விளக்கு திடல் பகுதியில், மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் "உரிமைப்பந்தம்" என்ற அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை; உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் செம்மணி பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில், செம்மணி அணையா விளக்கு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உலகளவில் பேசப்பட்ட ஒன்றான நிலையில், அங்கு தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளையும் சேர்த்து, மொத்தம் 427 எலும்புக்கூடுகளை நினைவுறுத்தும் வகையில் 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு அமைதி வழிப் போராட்டம் நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி வேண்டியும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் இந்த உரிமைப்பந்தம் நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.


No comments