வவுனியா முதல்வர்:சாவகச்சேரி –பிரதி தவிசாளர் வெளியே!



வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரின் பதவி நீக்கம் தொடர்பாக வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை விமர்சித்து உரையாற்றியமைக்கும் அந்த சுற்றறிக்கையை அவ்வாறு பேசும் போது தூக்கி எறிந்தமைக்கும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்தாமல் தெரிவு செய்யப்பட்ட மாகாண உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரங்களை அவ்வாறு தெரிந்தெடுக்கப்படாத ஆளுநர் துஸ்பிரயோகம் செய்வது மிக மோசமான ஜனநாயக விரோத செயல். குறிப்பாக தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சி புரியும் சபைகளை வேண்டுமென்றே ஆளுநரின் அதிகாரங்கள் கொண்டு ஒடுக்குகின்றதென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரு நியமன அரசியல்வாதி விசாரணைக்குழு அறிக்கை ஒன்றினை அடிப்படையாக வைத்து தான் திருப்திப்படுவதாக தெரிவித்து ஒரு மக்கள் பிரதிநிதியை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நீக்கலாம் எனில் மக்களால் மக்களுக்கான ஆட்சி எங்கே நடைபெறுகின்றதென கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளை வவுனியா மாநகர சபை முதல்வர்; சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அரச அச்சக திணைக்களத்தினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் வவுனியா மாநகரசபை மேயர் பதவியிலிருந்தும், மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஆளுநருக்கு உரிய அதிகாரங்களை பயன்படுத்தி நீக்கப்படுகிறார் என வர்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வடக்கு மாகாண ஆளுநரான நாகலிங்கம் வேதநாயகன், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், தனிநபர் விசாரணைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே.கந்தையா அரியநாயகம் அவர்களை ஆணையாளராக நியமித்து வவுனியா மாநகரசபை தொடர்பான நடவடிக்கைகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  பணித்திருந்தார். 

அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் ஏற்பாடுகளின் படி முதல்வராக தொடரத் தகுதியற்றவர் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments