வடக்கில் காணி வியாபாரத்தில் பிரதேச செயலர்கள்!
யாழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அரச காணியை கடற் படையின் தேவைக்காக யாழ் மாவட்ட செயலக காணி பயன்பாட்டு குழு வழங்கிய விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்வியால் குழப்பநிலை ஏற்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதை இவ்வாறான நிலை ஏற்பட்டது.
குறித்த விடையம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்புகையில் நான் அறிந்த வகையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணி பயன்பாட்டு குழுவினால் நெடுந்தீவில் கடற்படையினருக்கு ஒரு ஏக்கர் காணி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபனிடம் கேள்வி எழுப்பினார்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் நெடுந்தீவு பிரதேச செயலாளரை குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கூறிய நிலையில் அவர் பின்வருமாறு கூறினார்.
ஏற்கனவே கடற்பபடையினர் பயன்படுத்திய அரச காணியை அவர்களின் தேவைக்காக பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்ட காணி பயன்பாட்டு குழுவினால் அனுமதிக்கப்பட்டதாக கூறினார்.
இதன்போது குறிப்பிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெடுந்தீவில் யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் கடற்படையினருக்கு என்ன தேவைக்காக காணி வழக்கினீர்கள்.
அங்குள்ள மக்கள் பல்வேறு சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களின் தேவைக்காக ஏன் காணியை உங்களால் வழங்க முடியவில்லை.
அது மட்டும் அல்லாது மக்கள் பிரதிநிதிகள் எங்களுக்கு தெரியாமல் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் எப்போது தீர்மானம் எடுத்தீர்கள் பிரதேச சபை சார்பில் யாரை அழைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதன்போது கருத்தை தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரதேச சபையின் தவிசாளர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த நெடுன் தீவு பிரதேச சபை தவிசாளர் கடற் படைக்கு காணி வழங்கும் தீர்மானம் தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது என்றார்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறும் ஜனாதிபதி தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினருக்கு காணி பிடித்துக் கொடுப்பதில் மும்மரமாக செயல்படுகிறார்.
தேசிய மக்கள் சக்தியின் போலி முகத்திரை மக்களுக்கு நன்கு தெரிகிறது அரச காணி ஆனாலும் மக்களின் பயன்பாட்டுக்கு அதை வழங்க வேண்டுமே தவிர பாதுகாப்பு தரப்பினருக்கு எடுக்க முடியாது என்றார் .
யுத்தத்திற்கு முன்னர் எடுக்கப்படாத காணி யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு பிறகு பாதுகாப்பு தேவைக்காக எடுப்பதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார்.
இதன்போது கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஆதரவாக பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கருத்துக்களை முன்வைத்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவர் கடந்த அரசாங்கங்களில் ஏன் நீங்கள் காணி பிடிப்புகளை எதிர்க்கவில்லை என கேள்வி எழுப்பிய நிலையில் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியின் ஆதரவாளரை வெளியேறுமாறு தவிசாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் பொலிசார் மண்டபத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இதன போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடற்படையின் தேவைக்காக வழங்கப்படும் காணி தொடர்பான தீர்மான கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான விவரங்களையும் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விவரத்தையும் எதிர்வரும் அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்

Post a Comment