ஆமிக்கு காணி:கச்சேரியில் கலக்கம்!
இலங்கை அரச படையினருக்கு காணிகளை ஒதுக்கி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குழப்பத்தைத்தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரான அமைச்சர் சந்திரசேகரானால் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அதன்போது யாழ் மாவட்டத்தில் முப்படையினருக்கு அரச காணிகள் வழங்குவதான நோக்குடன் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு தீர்மானம் ஒன்றை ஒருங்கிணைப்புக் குழு நிறைவேற்ற முற்பட்டது.
இன்னிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தோன்றியதை அடுத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
குறிப்பாக நெடுந்தீவில் உள்ள அரச காணி ஒன்றிலிருந்து கடற்படையினருக்கு ஒரு ஏக்கர் காணி வழங்க பிரதேச ஒருங்கிணைப்பு குழு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் கோரப்பட்டது.
இன்னிலையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்களுக்கு காணி இல்லாதிருக்கும் நிலையில் அரச படையினரின் தேவைக்காக காணி வழங்க முடியாது. அது யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.
அத்துடன் மக்கள் காணி நிலங்களிலிருந்து அரச படையினர் வெளியேற வேண்டும் என்று எமது மக்கள் நாளாந்தம் போராடிவரும் நிலை ஒருபுறம் இருக்க, மறுபுறம் காணி இன்றி அடிப்படை தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாது பல ஆயிரம் மக்கள் துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மக்கள் காணிகளை மக்களுக்கு வழங்காமல் படைத்தரப்புக்கு வழங்க முடியாது என அரச தரப்பு மற்றும் பொது அமைப்புகள் தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்தே ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் காவல்துறையினர் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment