சிறையில் உள்ள ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து ?
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் , சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அசாதாரண சூழல் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் பரவும் துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.
அந்த வகையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலே அசாதாரண சூழலை தொடர்ந்து மகசின் சிறைச்சாலையில் பதற்றமான சூழல் நிலவுவதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
அதனால், தமிழரசியல் கைதிகளுடைய குடும்பத்தினர், சிறைகளில் இருக்கின்றதங்களின் உறவுகளை எண்ணி, மிகவும் துயரத்தோடு பரிதாபகரமான நிலையில் காணப்படுகின்றனர்..
தமிழ் அரசியல் கைதிகள் 31 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலே குறிப்பாக, மகசின் சிறைச்சாலையிலே நாலு தமிழ் அரசியல் கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையிலே மூன்று பேரும், கண்டி போகம்பரையிலே இரண்டு பேரும், அம்பாந்தோட்டை தங்காலை பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஒருவருமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் 31 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஏற்கனவே அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே காணப்படுபவர்கள். இவ்வாறான பாதுகாப்பற்ற சூழல் வந்து, அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
எனவே, தமிழ் அரசியல் கைதிகளுடைய பாதுகாப்பை இந்த அரசு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்திலே, ஆனந்த சுதாகரனுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பு இல்லை என்பது தொடர்பாக ஆனந்த சுதாகரன் உடைய தாயார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறைச்சாலையின் தலைமை அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.
ஆனந்த சுதாகரன் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலிலே, அவர் திடீரென்று கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டிருந்தார். ஆனால், அங்கே அவருக்குரிய பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அங்கே நிலவுவதாக தொடர்ச்சியாக அவருடைய தாயார் எங்களுக்கும் முறைப்பாடு செய்திருந்தார். .
எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலாலே, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு உயிர் அச்சுறுத்தல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இந்த விடயத்தை கருத்திலே கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களை விரைவாக விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேபோல, சிறைச்சாலையிலே ஏற்பட்ட அசாதாரண சூழல் சம்பந்தமாக அங்கிருந்து மாற்றப்பட்ட கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அறிகிறோம்.
அதனை உடனடியாக சிறைச்சாலை நிர்வாகம் தலையிட்டு நிறுத்த வேண்டும். கடந்த காலங்ககளில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டன.
கடந்த காலத்திலே வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் , அங்கிருந்த முழு கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்கள்.
அதிலே குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளான, டில்ருக்சன் மற்றும் நிமலரூபன் ஆகிய இருவரையும் சிறைச்சாலை அதிகாரிகளாலே அடித்துச் சாகடிக்கப்பட்டிருந்தார்கள். எனவே, இதே போல் ஒரு சூழல் இப்போது ஏனைய கைதிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சிறைச்சாலையில் "கைதிகளும் மனிதர்களே" என்ற ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிறைக்குள்ளே அவர்கள் மனிதர்களாகக அவர்களைக் கையாள்வதே இல்லை.
எனவே, கைதிகள் விடயத்திலே இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கம் போன்றே, பாராமுகமாக செயற்படுகிறது.
நாங்கள் தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலைக்காகச் செயற்படுபவர்களாக இருந்தாலும், நாங்கள் மனிதத்தை நேசிக்கிறோம்
எனவே, இந்தச் சிறைச்சாலைகளுக்குள்ளே நாலு சுவர்களுக்குள்ளே எந்தக் கைதியாக இருந்தாலும், துன்புறுத்தப்படுவதையோ அல்லது உயிரை அச்சுறுத்தல் ஏற்படுத்துவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை, விரும்புவதுமில்லை.
ஆகவே, "கைதிகளும் மனிதர்கள்" என்ற அந்த வாசகம் செயல் வடிவில் கொண்டுவர இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை, வழமை போல விசாரணைகளை நடத்தி மூடி மறைக்காமல், கலவரங்கள் ஏற்பட்டு, அதிலே கைதிகள் இறந்ததாகக் கணக்குக் காட்டாமல், உண்மையான, விரிவான விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதே நேரத்திலே, நீண்ட காலமாக கொடிய துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எங்களுடைய தமிழ் அரசியல் கைதிகளை விடுபடுவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் வந்த பின்னர் எந்தவொரு அரசியல் கைதிகளும் இதுவரைக்கும் விடுதலை செய்யப்படவில்லை. விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் கூட இதுவரைக்கும் நடக்கவில்லை.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிரந்தரத் தீர்வாக அவர்களுக்கு விடுதலை எனும் செய்தி விரைவாக எங்களுடைய காதுகளுக்குக் கேட்கச் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment