யோசித விடயம்:முன்னாள் கடற்படை தளபதிக்கு காய்ச்சல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோசித ராஜபக்ச இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக இணைத்துக்கொள்ளப்பட்டமை மற்றும் பிரித்தானியாவின் பிரிட்டானியா ரோயல் கடற்படைக் கல்லூரியில் (பயிற்சிகளைப் பெறுவதற்காக அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
இதனிடையே குற்றச்சாட்டுக்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று அழைப்பு விடுத்திருந்தது.
எனினும், தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு காரணமாக இன்றைய திகதியில் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் 16ஆம் திகதியன்றும் வசந்த கரன்னாகொடவிற்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தனக்கு அதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் ஆஜராகியிருக்கவில்லை. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை லெப்டினன்ட் யோசித ராஜபக்ச, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பக் கடற்படை விதிகளின்படி அறிவியல் அல்லது கணிதப் பிரிவில் உயர்தரம் சித்தியடைந்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்த போதிலும், கலைப் பிரிவில் கல்வி கற்ற யோசித ராஜபக்சவை உள்வாங்குவதற்காக தகைமைகள் மற்றும் சாதாரண தரத் தேவைகள் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

Post a Comment