ஆட்சிகள் மட்டுமே மாறுகின்றன?
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையில் வடமாகாணத்தில் அடைமழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற நிலையில் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை மக்கள் தொடர்கின்றனர்.
கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவமுகாமுக்கு முன்பாக இன்றைய தினம் நான்காவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வலி. வடக்கில் நான்கு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் காணிகளை விடுவிக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்ததன் படி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் நாலாவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்துள்ளனர்.

Post a Comment