மிகப்பெரும் ஆயுதமாக தமிழ் தேசிய நினைவுத்தினம்!
ஈழத்தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி தந்திரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன்று எங்கள் முன் வைத்துள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொள்கைப் பிரகடனத்தில் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரரசு கட்டமைப்பின் புவிசார் நலன்களுக்காகவும் சிங்கள பௌத்த பேரினவாத ஏகாதிபத்தியத்தை தக்க வைப்பதற்காக கூட்டுத் தமிழின அரசியல் வேணவாவை அதன் ஆயுத பரிணாமத்தை தமிழின அழிப்பிற்கு ஊடாக முடிவுக்கு கொண்டு வந்ததன் மாயை முள்ளிவாய்க்காலில் நிகழும் தமிழின அழிப்பு நினைவுகூரல் தகர்த்து எறிகின்றது.
17 ஆண்டுகள் கடந்தும் இம்மண்ணிலே கொத்து கொத்தாக கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி ஆகாயமே எல்லையாக அவர்களின் கனவுகளை சுமந்து வரும் காற்றே சாட்சியாக இரத்தம் தோய்ந்த மண்ணில் தேசத்திற்கான கனவுகளைச் சுமந்து அடக்குமுறையை எதிர்த்து விடுதலைப் பயணத்தை கூட்டாக தொடர ஒரு தேசமாக முள்ளிவாய்க்கால் திடலில் ஒன்றுகூடியுள்ளோம்.
எமது கூட்டு அரசியல் கோரிக்கைகள் நியாயமானவை. அற தாற்பரியம்கொண்டவை. அவை இன்னொரு கூட்டுக்குழுமத்தின் கூட்டுத்தனி இருப்பை அச்சத்திற்கு உள்ளாக்கவில்லை என்பதை மீள வலியுறுத்துகின்றோம்.
ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், ஈழத் தமிழ்த் தேசம் என்றுமில்லாதவாறு சிங்கள-பௌத்த தேசிய பேரினவாதத்தாலும், ஏக-பல்துருவ பேரரசுக் கட்டமைப்பினாலும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அடக்கு முறையின் பல்வேறு வடிவங்கள் நாளாந்த வாழ்வியலாக சாதாரண மயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசத்தின் நிலம் தொடர் அபகரிப்பிற்க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவமயமாக்கத்தின், சிங்கள-பௌத்தமயமாக்கத்தின் செறிவு அதிகரித்துள்ளது. மத அடையாளங்கள் குறிப்பாக சைவ சமய தலங்கள் தொடர் இலக்குகளாக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் தேசிய பூர்வீக வரலாறு சிதைக்கப்பட்டு, சிங்கள இனத்தை பூர்வீகக் குடிக குடிகளாக மாற்றும் வரலாறு உருவாக்கப்படுகிறது.
நமக்குள்ள மிகப்பெரும் ஆயுதமாக விரிந்து கிடப்பது தமிழ் தேசிய நினைவுத்தினம். நாங்கள் நினைவு கூரும் வரைக்கும் எங்களை யாராலும் அழிக்க முடியாது. கழிந்த காலம் எமக்கான எதிர்காலத்தை வடிவமைக்க உதவி செய்கின்றதென ஏற்பட்டுக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment