அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சர்


அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்ததாகக் கூறப்படும் 15 அம்ச முன்மொழிவுக்குத் தனது நாடு பதிலளிக்கவில்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார் .

அமெரிக்கத் தரப்பிலிருந்து எங்களுக்குச் செய்திகள் வருகின்றன. சில நேரடியாகவும், சில இப்பகுதியில் உள்ள எங்கள் நண்பர்கள் மூலமாகவும் வருகின்றன. தேவைப்படும்போதெல்லாம், அந்தச் செய்திகளுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம் என்று அல் ஜசீராவிடம் இன்றுபுதன்கிழமை  அராக்சி  கூறினார்.

அமெரிக்காவுடனான தொடர்புகள் என்பது ஈரான் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பொருளல்ல என அராக்சி கூறியதாக கத்தார் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

பேச்சுவார்த்தைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய அவர், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃபுடன் சில செய்திகள் நேரடியாகப் பரிமாறப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஈரானில் உள்ள எந்தவொரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அராக்சி மேலும் கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. 

அனைத்து செய்திகளும் வெளியுறவு அமைச்சகம் மூலமாகவே தெரிவிக்கப்படுகின்றன அல்லது அதனால் பெறப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயும் தகவல் தொடர்புகள் நடைபெறுகின்றன என்று அவர் கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் , துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் சமீபத்தில் தொடங்கப்பட்டன.

கடந்த வாரம், அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட போர் நிறுத்தத் திட்டத்தை பாகிஸ்தான் வழியாக தெஹ்ரானுக்கு அனுப்பியது.    

அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு எனத் தாங்கள் கருதுவதை முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் பகைமையைத் தொடங்காது என்பதற்கான உத்தரவாதங்களை வழங்கவும் கோரி, தெஹ்ரான் ஐந்து அம்ச மாற்று முன்மொழிவை வழங்கியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இருப்பினும், அமெரிக்காவின் முன்மொழிவுக்கு தெஹ்ரான் பதிலளிக்கவில்லை என்றும், எந்தவொரு முன்மொழிவுகளையோ அல்லது நிபந்தனைகளையோ சமர்ப்பிக்கவில்லை என்றும் அராக்சி புதன்கிழமை அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

No comments