அட்டமஸ்தானாதிபதிக்கு அட்டமத்தில் சனியன்!
தென்னிலங்கை பௌத்தர்களிடையே பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள பௌத்த பிக்குகளின் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கை மீதான விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை, எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, மரபணுச்சோதனைக்கான பரிசோதனைக்காகத் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அநுராதபுர பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரத்த மாதிரியை வழங்கியதன் பின்னர், அது தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதம நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்குப் பணித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரால் பாதிக்கப்பட்ட சிறுமியால் மறைத்து வைக்கப்பட்டிருந்து மீட்கப்பட்ட, இரத்தக் கறைகள் படிந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடைகள், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆடைகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில், சிறுமியின் ஆடைகளில் மரபணுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்
இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய தேரரின் இரத்த மாதிரியைப் பெற்று, அந்த ஆடைகளில் கண்டெடுக்கப்பட்ட மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை காப்பாற்ற அரசு பர்டுபடுவதாக சிறுவர் உரிமைகளிற்கான அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment