பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி எரிபொருளை சேமிக்குமாறு ஆஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தினார்!


ஈரான் போரினால் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய பொருளாதார அதிர்ச்சிகள் குறித்து எச்சரித்ததோடு, முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப்பயன்படுத்துமாறு குடிமக்களை ஊக்குவித்தும், முக்கிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அரிதான மாலை நேர உரையை ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆற்றினார். 

தற்போதைய சூழலில் நேர்மறையாக இருப்பது கடினம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்று அல்பானீஸ் கூறினார். மத்திய கிழக்கில் நடக்கும் போர், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால், இதன் காரணமாக அனைத்து ஆஸ்திரேலியர்களும் அதிக விலையைச் செலுத்துகிறார்கள். 

வளங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா, சுரங்கத் தொழிலில் ஒரு வல்லரசாகவும் , நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் இருந்தாலும், அது தனது எரிபொருளில் சுமார் 90%-ஐ இறக்குமதி செய்கிறது. 

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட தடையின் விளைவாக, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிப்ரவரி மாதம் முதல் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக உயர்ந்திருந்த விலைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், அரசாங்கம் இன்று புதன்கிழமை முதல் எரிபொருள் வரிகளைக் குறைக்க நிர்பந்திக்கப்பட்டது. 

பரந்த பண்ணைகளுக்குப் பெயர் பெற்ற அந்த விரிந்த நாட்டில், டீசல் விலை குறிப்பாக அதிகமாக இருப்பதால், விவசாயத் துறைக்குக் கணிசமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. 

நீங்கள் பயணம் மேற்கொள்வதாக இருந்தால், தேவைக்கு அதிகமாக எரிபொருள் நிரப்பாதீர்கள் வழக்கம் போல் நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் சமூகத்தில் உள்ளவர்களையும், கிராமப்புறங்களில் உள்ளவர்களையும், அத்தியாவசியத் தொழில்களில் உள்ளவர்களையும் நினைத்துப் பாருங்கள் என்று பிரதமர் கூறினார். மேலும், வரும் வாரங்களில், உங்களால் பணிக்குச் செல்ல பேருந்து அல்லது டிராமிற்கு மாற முடிந்தால், அவ்வாறே செய்யுங்கள் என்றார். 

கோவிட் பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தின்போதும் 2008-ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின்போதும் இதேபோன்ற அவசரகால ஒளிபரப்புகளை ஆஸ்திரேலியப் பிரதமர்கள் மேற்கொண்டனர்.

No comments