அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று இன்னும் முடிவில்லை!
அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பாகிஸ்தான் தூதுக்குழு தெஹ்ரானுக்கு வருகை தந்த நிலையில் அவர்களுக்கிடையேயான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு எந்தத் திகதிகளும் நிர்ணயிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட பயணம் கருத்து வேறுபாடுகளைக் களைய உதவியதாகவும் ஒரு மூத்த ஈரானிய அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் தெஹ்ரான் பயணம் சில பகுதிகளில் கருத்து வேறுபாடுகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அணுசக்தித் துறையில் அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடிக்கின்றன. போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கூடுதல் நம்பிக்கைகள் உருவாகியுள்ளன என்று அந்த மூத்த அதிகாரி கூறினார்.
ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் எதிர்காலம் மற்றும் ஈரானின் அணுசக்தி கட்டுப்பாடுகளின் கால அளவு ஆகியவை மிகவும் சர்ச்சைக்குரிய
பிரச்சினைகளில் அடங்கும் அவற்றுக்கு இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது ஈரானும் அமெரிக்காவும் ஓர் உடன்பாட்டிற்கு வரவில்லை .
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், அமெரிக்காவின் முன்மொழிவை அவர்களின் இறுதியான மற்றும் சிறந்த முன்மொழிவு என்று வர்ணித்த வேளையில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் , ஈரானிய தூதுக்குழுவின் நம்பிக்கையைப் பெறுவதில் அமெரிக்கா இறுதியில் தோல்வியடைந்துவிட்டது என்று கூறினார்.

Post a Comment