ஜந்து மணி நேர வாக்குமூலம்!



யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (19) விரிவுரைகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை மாணவ சமூகம் முன்னெடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடி போராட்டத்தின் போது, பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படடிருந்தனர்.அவர்களிடம் சுமார் ஜந்து மணி நேரவாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆட்சியின் கீழும் தொடரும் மாணவர் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெறும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் மீதான இலங்கை காவல்துறை விசாரணைகள் நிறுத்தப்பட்டு, அவை பல்கலைக்கழக நிர்வாக மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படக்கூடாதென மர்ணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அனைத்து விரிவுரைகளையும் புறக்கணித்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலை மூடி அதன் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் விசாரைணக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ள மாணவர்கள் திரும்பி வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்த நிலையில் போராட்டத்திற்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து இணைந்திருந்தனர்.


No comments