மிரட்டி மகிந்தவை காட்டி தரச்சொல்கின்றனராம்?
அனுர அரசு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பெயர்களைகளை ஊழல் முறைகேடுகளில் இணைக்க தன்னை வற்புறுத்தியதாக சிறீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம்தான் முன்பு அளித்த வாக்குமூலம், அச்சுறுத்தலின் பேரில் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கப்பட்டதாக சந்திரசேன கூறியதாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அந்த ரூ. 60 மில்லியன் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாக சந்திரசேன கூறியிருந்தார்.
முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு கூடுதலாக ரூ. 20 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, சந்திரசேனவை ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் கோரி அதனை பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் முன்னதாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மார்ச் 18 திகதியிடப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஆணைக்குழுவுக்கு அளித்த தனது வாக்குமூலம் தானாக முன்வந்து அளிக்கப்படவில்லை என்று சந்திரசேன கூறியுள்ளார்.
விசாரணையின் போது, தன்னை பதிவு அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றதாகவும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கைது செய்யப்படுவார் என எச்சரிக்கப்பட்டதாகவும், தனது வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பெயர்களைச் சேர்க்குமாறு வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Post a Comment