கோத்தா தப்பி ஓடிய கணக்கு கேட்கின்றனராம்!

 


2022 பொதுமக்கள் எழுச்சியின் போது, உயிரைப்பாதுகாத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தப்பியோடிய சம்பவத்தில், கடற்படைப் பயணம் தொடர்பான செலவுகள் மற்றும் பணம் செலுத்திய விவரங்களை தகவல் அறியும் உரிமையில் வெளியிடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக, இலங்கை கடற்படை தாக்கல் செய்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச 2022 ஜூலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக செலவிட்டு நிதி விடயங்களை பகிரங்கப்படுத்த நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடற்படைக் கப்பலில் தப்பித்ததாக வெளி வந்த செய்திகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரில், இன்று; தீர்ப்பு வழங்கப்படடுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியுடன் சென்றவர்களின் பெயர்கள் மற்றும் அதற்கான செலவு உள்ளிட்ட எட்டு விவரங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்தன. எனினும் தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, இலங்கை கடற்படை ஆரம்பத்தில் மனுவை முழுமையாக நிராகரித்திருந்தது.

ஊடகவியலாளரின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 2023 இல் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு, பயணத்தின் செலவு மற்றும் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியவர் ஆகிய இரண்டு முக்கிய விவரங்களை வெளியிடுமாறு கடற்படைக்கு உத்தரவிட்டது, 

தீர்ப்பில், நிதித் தரவுகளை வெளியிடுவது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற கடற்படையின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது; அந்த வாதத்திற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமை ஒரு அடிப்படை உரிமை என்றும், விதிவிலக்குகள் குறுகிய வரம்பிற்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


No comments