சாவகச்சேரி நகரசபைக்கு பாராட்டு!
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்திற்கு யாழ்.ஊடக அமையத்தை முன்னுரிமையாக கொண்ட இலங்கை ஊடக அமைப்புக்கள் பாராட்டுத்தெரிவித்துள்ளன.
ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதற்காகவும் அடக்குமுறை சட்டங்களை எதிர்ப்பதற்காகவும் சாவகச்சேரி நகர சபை எடுத்த தைரியமான நடவடிக்கையானது இலங்கையின் ஜனநாயக பெறுமதிகள் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான மைல்கல்லை சுட்டிக் காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கும், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை மீளப் பெறவும் வலியுறுத்தி சாவகச்சேரி நகர சபை நிறைவேற்றிய தீர்மானத்தை 'சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு' ஆகிய நாங்கள் மிகுந்த மரியாதையுடன் பாராட்டுகிறோம்.
கடுமையான அரசியல் அழுத்தங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்க நகர சபை எடுத்த இந்த தீர்மானம் நவீன அரசியல் கலாசாரத்திற்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க முன்மாதிரியாகும்.
இந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு சில கருத்துக்களை வலியுறுத்த விரும்புகிறது.
அடக்குமுறைக்கு எதிரான நிலைப்பாடு: பல தசாப்தங்களாக இலங்கை மக்களை கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (Pவுயு) எதிராக சட்டரீதியான மற்றும் நெறிமுறையான நிலைப்பாட்டை எடுப்பது நீதியான சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஜனநாயக பொறுப்புணர்வு: மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பவர்களே தவிர, அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்குபவர்கள் அல்ல என்பதை வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தேசிய ஒற்றுமைக்கான செய்தி: வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எடுத்த இந்த நடவடிக்கையானது இலங்கையின் சகல மக்களதும் சுதந்திரம் மற்றும் நீதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு வலுவான குரலாகவே நாங்கள் காண்கிறோம்.
சாவகச்சேரி நகர சபையின் கௌரவ தவிசாளர் உள்ளிட்ட அனைத்து பிரதிநிதிகளும் வெளிப்படுத்திய இந்த துணிச்சலான செயற்பாடு நாட்டின் எதிர்கால ஜனநாயக பயணத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது. அநீதியான, அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக இத்தகைய குரல்கள் எழுப்பப்படுவது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் சமூகத்திற்கு இன்றியமையாத காரணியென்பதனை நாங்கள் நம்புகிறோம்.
இந்த பெருமைமிக்க தீர்மானத்திற்கு எமது முழுமையான ஆதரவையும் கௌரவத்தையும்; தெரிவித்துக் கொள்கிறோமென சமூக ஊடக பிரகடனத்திற்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment