தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உருக்கம்


எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக் தினத்திற்கு முன்னர் எமது காணிகளை கையளிப்பார்கள் என நம்புகிறோம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். 

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது 

குறித்த கலந்துரையாடலின் பின்னர்,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

எமது காணி விடுவிப்பு தொடர்பில் கொழும்பில் மூன்று தடவைகள் சந்தித்து பேச்சுக்கள் நடாத்தியுள்ளனர். அவை எதற்கும் எம்மை அழைக்கவில்லை. இந்த முறை குறுகிய கால அறிவித்தல் தந்து எம்மை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை பேசினார்கள்.

எமது காணிகளை கையளிப்பதற்காக தாம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் , உறுதிகளை உறுதிப்படுத்தி கொண்டுள்ள நிலையில் ,  காணியின் வரைபடங்கள் தேவையாக உள்ளதால் காணிகளை அளவீடு செய்து காணி வரைபடம் வரைவதற்கு , காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரினார்கள். 

அதற்கு நாம் விகாரையின் பிக்கு தனது விகாரைக்குரிய காணி எது என்பதனை காண்பிக்குமாறு கேட்குமாறும் , அவரிடம் ஆவணங்கள் எவற்றையும் இது வரையில் இவர்கள் கேட்கவில்லை. எம்மை மட்டுமே எல்லா ஆவணங்களையும் கொண்டு வா என அலைக்கழிக்கின்றனர். 

தற்போது கூட எமது காணிகளை நாம் அடையாளம் காட்டி காணிகளை அளவீடு செய்ய சம்மதித்து , காணி அளவீட்டு பணிகளை மேற்கொண்டு , எமது காணிகளை சுவீகரிக்கும் முயற்சியா ? என்ற சந்தேகம் உண்டு. 

எமது சந்தேகத்தை நாம் கேட்ட போது, இது நிச்சயமாக காணியை அடையாளம் கண்டு கையளிப்பதற்காவே அளவீடு செய்கிறோமே தவிர , காணிகளை சுவீகரிக்கவில்லை என கடற்தொழில் அமைச்சர் உறுதியளித்துள்ளார். 

அவரை நம்பி காணி அளவீட்டு பணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். காணி அளவீட்டு பணிகள் முடிவடைந்ததும் , காணிகளை எப்போது விடுவிப்பீர்கள் என கேட்ட போது , இரண்டு கிழமைக்குள் அதனை விடுவிப்போம் என தெரிவித்தனர். மே மாதம் முதலாம் திகதி வெசாக் தினம். அன்றைய தினத்திற்கு முன்னர் காணிகளை விடுவிக்கப்படும் என நம்பி எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். 

அதேவேளை மற்றுமொரு காணி உரிமையாளரான பாஸ்கரன் தெரிவிக்கையில், 

எமது காணிகளை விட்டு நாம் வெளியேறி 36 வருடங்கள் ஆகின்றன. காணிகளை அடையாளம் காண்பது என்பது மிக சவாலான விடயம் 

எமது காணிகளின் எல்லைகள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றினை மீள அடையாளம் கண்டு அளவீடு செய்ய வேண்டும். 

இந்த காணி அளவீட்டு பணியானது , எமது காணிகளை விகாரைக்காக நிரந்தரமாக சுவீகரிக்க எடுக்கும் முயற்சியாக இருக்க கூடாது என வலியுறுத்தினோம். கடந்த கால கசப்பான அனுபவங்களை கூட நாம் தெரிவித்தோம். 

இந்த காணி அளவீடானது , காணிகளை மீள கையளிப்பதற்கான நாடாவடிக்கையே என எமக்கு உறுதியளித்துள்ளனர். அவர்கள் அதனை மீற மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ,காணிகளை அளவீடு செய்து எல்லைப்படுத்த சம்மதித்துள்ளோம் என தெரிவித்தார். 


No comments