யாழில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்திய அனுரவை கைது செய்யுங்கள்


யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்  முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் இளைஞர் விவகார செயலாளர் குமார ராஜரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரே இந்த முறைப்பாட்டை  பதிவு செய்திருந்தனர்.

ஜனாதிபதியின் கருத்துக்கள் நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையானது, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

குறிப்பாக, வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குமார ராஜரத்ன,

ஜனாதிபதி தனது உரையின் மூலம் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் வன்முறையையும் பிரிவினையையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு முயற்சித்துள்ளார். 

இது தண்டனைக்குரிய குற்றமாகும். புனித பூமிகளை மையப்படுத்தி அவர் வெளியிட்ட கருத்துக்கள், பௌத்த மக்கள் வடக்கு நோக்கி வருவது  குரோதத்தை பரப்புவதற்கே என்ற தோரணையில் அமைந்திருந்தன.

மதச் சுதந்திரமும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான உரிமையும் உள்ள ஒரு நாட்டில், இத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்களிடையே சிங்கள மக்கள் மீது தேவையற்ற பகையை உருவாக்கும்.

தற்போது ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு  காணப்படுவதால் உடனடியாகக் அவரை கைது செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்.

எனினும், அவரது பதவிக்காலம் முடிந்தவுடன், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை  சட்டத்தை மீறியமைக்காக அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தொடர்பில் அனைத்து சட்ட ரீதியான ஆதாரங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்துள்ளோம். 

அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததும் அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார். 

No comments