மகிந்த - பஸில் மற்றும் சந்திரகுமார் மீது நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னைய மகிந்த –பஸில் ஆட்சிக்காலத்தில் பாரிய மோசடிகளுடன் நடந்தேறிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.பொது அமைப்புக்கள் பலவும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தயாராகிவருகின்றன.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியிலிருந்த காலப்பகுதியில் கிளிநொச்சியில் அபிவிருத்தியென்ற பேரில் போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்நிதியில் திருவாளர் பத்து சதவீதமென்ற பேரில் அழைக்கப்பட்ட பஸில் ராஜபக்ச பெருமளவை சுருட்டிக்கொள்ள உள்ளுர் முகவர்களும் தமது பங்கிற்கு கணக்கு வழக்கின்றி சுருட்டியிருந்தனர்.ஒருபுறம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் மறுபுறம் நாடாளுமன்ற குழுக்களது தலைவராகவும் அப்போதிருந்த ஈபிடிபி பிரமுகரான சந்திரகுமார் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.மறுபுறம் தமது கோரிக்கையின் பேரில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் என பிரச்சாரங்களை அவரே முன்னெடுத்துமிருந்தார்.
முழத்திற்கொரு குடில்கள் என வகை தொகையின்றி அமைக்கப்பட்ட பல கட்டடங்கள் கிளிநொச்சி மற்றும் பூநகரியில் பயன்படுத்தப்படாது அநாதரவாக கைவிடப்பட்ட நிலையிலுள்ளது.
இந்நிலையில் அக்காலப்பகுதியில் அமைக்கப்பட்ட பெருமளவு வீதிகளும் தற்போது மிக மோசமடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு உதவாததாக கைவிடப்;பட்டுள்ளது.
அத்தகைய சூழலிலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி முட்கொம்பன் வீதி புனரமைப்பில் நடந்தேறிய மோசடிகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசில் விசாரணை கோரி ஆர்ப்பாட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 14கோடி நிதி ஒதுக்கீட்டில் உலக வங்கி நிதி பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்ட குறித்த கொங்கிறீற் வீதி தற்போது மக்கள் பயணிக்க முடியாததொரு வீதியாக கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த போது பூநகரி பிரதேசசெயலகத்தை முடக்கி அத்தகைய மோசடிகாரர்களை கைது செய்ய கோரி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment