புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியான கேணல் கிட்டு என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புலிகளின் 10 போராளிகள் பயணித்த கப்பலை சர்வதேச கடற்பரப்பினுள் இந்திய கடற்படையினர் வழிமறித்து சரணடைய கோரிய நிலையில் ,16.01.1993 அன்று கப்பலுடன் வெடித்து சிதறி வீரகாவியமானார்கள்.
வீரகாவியமான கேணல் கிட்டுவின் நினைவாக யாழ்பாணத்தில் முத்திரை சந்தி பகுதியில் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் " கிட்டு பூங்கா" திறந்து வைக்கப்பட்டது.
யுத்தம் தீவிரமடைந்து 1995 ஒக்டோபர் 30ஆம் திகதி மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் , கிட்டு பூங்கா முற்றாக அழிக்கப்பட்டது.
அதனை அடுத்து "கிட்டு பூங்கா" புனரமைக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்த போதிலும் , 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கிட்டு பூங்காவை , சங்கிலியன் பூங்கா என பெயர் மாற்றம் செய்து புனரமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அவை முழுமை பெறாது கைவிடப்பட்டது.
பின்னர் பூங்கா புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படாத போதிலும் , பூங்கா அமைந்திருந்த பகுதியில் அரசியல் பிரச்சார கூட்டங்கள் , கண்காட்சிகள், கூட்டங்கள் என்பன நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது கிட்டு பூங்காவை புனரமைக்கும் பணிகளை மாநகர சபை முன்னெடுக்கவுள்ள நிலையில் , முதல்கட்டமாக பூங்காவை சுற்றி சுற்று மதில் கட்டி , அதனை பாதுகாப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனை முன்னிட்டே நேற்றைய தினம் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் , ஆணையாளர் , உள்ளிட்ட மாநகர சபை அதிகாரிகள் கலந்து கொண்டு துப்பரவு பணிகளை முன்னெடுத்தனர்.

Post a Comment