கனடாவின் நினைவுத்தூபி சர்வதேசத்துக்கு நின்றுகூறும் செய்தியும் அநுர குமரவின் அதிகார ஆணவப் பேச்சும்! பனங்காட்டான்


இலங்கையில் இரண்டு தடவை பயங்கரவாதம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து, இரண்டு தடவைகளும் தடைசெய்யப்பட்டு, சிங்கள அரசியல் கட்சிகளின் சீர்கேட்டினால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி தனது திட்டம் என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. இவைகள் முழுமையாக செயற்படுத்தப்படுமானால் இந்து சமுத்திரத்தின் குட்டித்தீவு தேர்தல்களற்ற, அரசியல் கட்சிகளற்ற, நவீன சோசலிஸ நாடாகலாம். யார் கண்டது?

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் அதன் நினைவுக் காலமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் ஆரம்பமாகி, படுகொலையை சித்தரிக்கும் ஊர்தி பவனி நல்லூரிலிருந்து மாவட்டங்களூடாக முள்ளிவாய்க்காலை சென்றடைந்தது. 

கடந்த ஒன்றரை தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு உயிரும் உணர்வும் ஊட்டுவதாக கனடாவின் பிராம்ரன் நகரில் கடந்த பத்தாம் திகதி திறந்து வைக்கப்பட்ட நினைவுத்தூபியும், அந்நிகழ்வில் பிராம்ரன் நகர மேயர் பற்றிக் பிரவுண் நிகழ்த்திய உள்ளார்ந்த உரையும் அமைந்ததென்று பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பிராம்ரன் நகரசபை வழங்கிய பூங்காவில், அதற்குச் சொந்தமான நிலத்தில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டதும், அதன் அமைப்பும், அதில் சித்தரிக்கப்பட்டுள்ள தமிழீழ வரைபடமும், அங்கு பொறிக்கப்பட்டிருந்த வாசகங்களும் இதுவரை எந்தவொரு சர்வதேச மன்றிலும் நிறைவேற்றப்படாத தமிழினப் படுகொலையை நீண்டு நின்று சொல்லும் சாட்சியமாக அமைந்துள்ளது. 

புலம்பெயர் நாடொன்றில் தமிழினப் படுகொலைக்கான நினைவுத்தூபி முதன்முதலாக கனடாவில் நிர்மாணிக்கப்பட்டது வரலாற்றுக்குரிய பதிவு. 'இலங்கையில் தமிழினப் படுகொலை நடக்கவில்லையென்று எவராவது கூறினால் அவர்களுக்கு கனடாவில் இடம் இல்லை" என்று மேயர் பற்றிக் பிரவுண் கூறியது சிங்களவர்களுக்கானது மட்டுமல்ல. தமிழினப் படுகொலை இடம்பெறவில்லையென்று கூறிவரும் தமிழர்களுக்குமானது. 

ஆனால், இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டதற்கு முதலில் கண்டனக் கவலை வெளியிட்டவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல். தமது தந்தையின் தலைமையிலான ராஜபக்சக்களே தமிழினப் படுகொலையின் சூத்திரதாரிகள் என்பதாலும், இந்தப் படுகொலைகளுக்குச் சம்பந்தப்பட்ட ராஜபக்ச ஆட்சிக்கால படைத்துறை அதிகாரிகள் பலருக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டிருப்பதும் நாமல் ராஜபக்சவினால் ஏற்றுக்கொள்ள முடியாததை அவரது கவலை வெளிப்படுத்தியுள்ளது. 

சிங்கள மக்களை தாஜா பண்ணவென அநுர தரப்பு கொழும்பிலுள்ள கனடிய தூதுவரை அழைத்து ஆட்சேபணையைத் தெரிவித்தது. இது ஒரு சம்பிரதாயபூர்வமான நிகழ்வென்று இரு தரப்புக்கும் தெரியும். அதனால் கொழும்பின் கவலையை செவிமடுத்த கனடிய தூதுவர் தமது இணையத்தளத்தில் அதனைப் பதிவிட்டதோடு கதையை முடித்துவிட்டார். 

கனடாவின் சமஷ்டி அரசமைப்பைத் தெரிந்தவர்களுக்கு இதுபற்றி விபரிக்கத் தேவையில்லை. இங்கு மாகாண அரசுகளும் மாநில அரசுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அன்றி சுயமாக இயங்கும் சுதந்திரம் கொண்டவை. உதாரணத்துக்கு 2021ம் ஆண்டு ஒன்ராறியோ மாகாண சபை நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமை - சட்டமூலம் 104ஐ குறிப்பிடலாம். ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ம் திகதி முதல் 18 வரையான (முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு வாரம்) ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள கல்விச் சபைகளின் பாடசாலைகள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பை நினைவுகூர இச்சட்டமூலம் வழிவகுத்தது. 

இப்போது ரொறன்ரோவிலுள்ள 800 பாடசாலைகள் உட்பட இங்குள்ள யோர்க், பீல், டுர்ஹம், ஒட்டாவா கல்விச் சபைகளின் பாடசாலைகளும் இந்த வாரத்தை அனு~;டிக்கின்றன. ஒன்ராறியோவின் மிகப்பெரிய காவற்துறைச் சேவைகளில் ஒன்றான வாட்டர்லு பொலிஸ் பிரிவு இந்த வருடம் தமிழின அழிப்பு வாரத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். 

தமிழின அறிவூட்டல் சட்டத்தை ஒன்ராறியோ மாகாண சபையில் சகல அரசியல் கட்சிகளதும் ஏகோபித்த ஆதரவுடன் 2021ல் நிறைவேற்றியவர் விஜய் தணிகாசலம் என்ற மாகாண சபை உறுப்பினர். தற்போது இவர் மாகாண சபையில் ஓர் அமைச்சராக உள்ளார். இவரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தனது கையாட்கள் மூலம் பல வழக்குகளை அடுத்தடுத்து தாக்கல் செய்தது. இறுதியில் உச்ச நீதிமன்றமே இந்த வழக்குகளை ரத்துச் செய்து மாகாண சபை தீர்மானத்தை வலுப்படுத்தியது. 

இவ்வகையான சமஷ்டி ஆட்சி முறையே இலங்கைத் தமிழர் தங்கள் இனப்பிரச்சனைக்கான தீர்வாக கேட்டு வருகின்றனர். 2015ம் ஆண்டு வடமாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதற்கு எதிராகக் கருத்து வெளியிட்ட தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் நல்லாட்சிக் காலத்தில் ரணில் - மைத்திரியுடன் இணைந்து ஏக்க ராஜ்ய ஆட்சிமுறையை உருவாக்க முனைந்தவர் என்பதை இங்கு நினைவுக்குட்படுத்துவது அவசியமாகிறது. 

தமிழின படுகொலை வாரம் ஒருபுறத்தே உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்க அதன் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழர் வாழும் இடமெங்கும் வழங்கப்பட்டது. சமவேளையில், அண்மையில் இடம்பெற்ற உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அல்லது வெற்றி பெற்ற எந்தவொரு அணியும் இதுவரை பதவியேற்காத அவல நிலையையும் பார்க்க வேண்டியுள்ளது. 

தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசு கட்சிக்கே கூடுதலான வெற்றி கிடைத்தது. வடக்கில் இரண்டாவது இடத்தில் அநுர குமர அணி வெற்றி பெற்றது. இங்கு அடுத்தடுத்த இடங்களை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய பேரவையும், சித்தார்த்;தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் வெற்றி பெற்றன. தெற்கில் பெரும்பாலான சபைகளை அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி வெற்றி கொண்டது. ஆனால், எந்தவொரு சபையிலும் சிறுகட்சிகளின் ஆதரவின்றி அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியாத நிலை காணப்படுவதால் இணக்கப் பேச்சுவார்த்தைகளும், கூட்டுச் சபைகள் அமைப்பதும் பேசப்பட்டு வருகிறது. 

தமிழரசு கட்சியின் வெற்றி அதனை இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது. கிளிநொச்சியின் குட்டி மன்னரான அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இங்குள்ள மூன்று சபைகளதும் தவிசாளர், உபதவிசாளர் தெரிவு நடத்தி பட்டியலை கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் வழங்கிவிட்டார். யாழ்ப்பாண பிரதேசத்துக்கு பொறுப்பாகவிருந்த சுமந்திரன் இன்னமும் மற்றைய கட்சிகளுடன் பேச்சு நடத்திக் கொண்டேயிருக்கிறார். உருப்படியான எந்த முடிவையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், முடிவுகள் எட்டப்பட்டது போன்ற பாணியில் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னர் இருந்தபோது தமிழரசு கட்சியை முதன்மைப்படுத்தி நிர்வகித்தது போன்று இப்போதும் மற்றைய கட்சிகளை நடத்தும் பாணியால் நிலைமை சாண் ஏற முழம் சறுக்குவது போன்று காணப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதியதாலேயே தமிழ் தேசியம் என்ற பெயரோடு போட்டியிட்ட மூன்று அணிகளுக்கும் வாக்குகளை இட்டார்கள். இவர்கள் தொடர்ந்து கட்சி அடிப்படையில் இயங்காது ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்தால் மட்டுமே அது தமிழ்த் தேசமாக முடியும் என்ற எதிர்பார்ப்பினாலேயே ஒரு கட்சிக்கே வாக்குகளை வழங்காது மூன்றுக்கும் பிரித்து வழங்கினார்கள். இதனைப் புரிந்து கொள்ளாத தமிழரசுக் கட்சி முன்னர்போல தங்களை மூப்பனாக வைத்து ஏற்படுத்த முனையும் இணைப்பு மக்களின் எதிர்பார்ப்புக்கு தடையாகவுள்ளது. 

ஏறத்தாழ இதேபோன்ற ஒரு நிலைமையையே தெற்கிலும் காணமுடிகிறது. பெரும்பாலான சபைகளில் அநுர குமர அணி வெற்றி பெற்றிருந்தாலும், மற்றைய அணிகள் சிறுசிறு குழுக்களாக பெற்ற வாக்குகள் ஆட்சியமைப்பை தடுத்து வருகின்றன. இதனால் சினம் கொண்ட அநுர குமர தாம் இன்னும் முன்னைய ஜே.வி.பி. என்ற எண்ணத்தில் மனம் போன போக்கில் எச்சரிக்கைகளை விடுக்கிறார். 

ஆட்சி அமைப்பதற்கு மொத்தமாக வாக்குகளைப் பெறாத சிறிய கட்சிகளும் அணிகளும் கூட்டிணைந்து ஆட்சியமைப்பதை ஜனநாயக விரோதமென வர்ணிக்கும் இவர், தேவைப்படின் தங்கள் வசமுள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி உள்ளூராட்சிச் சபைகளை கைப்பற்ற முடியும் என்ற பாணியில் பயமுறுத்தியுள்ளார். இவரது தாய்க்கட்சியான ஜே.வி.பி.யின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே இந்தக் கர்ச்சனை வந்தது. 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அந்தக் கதிரையால் கிடைத்த ஆணவத்தில் எதனையெல்லாம் செய்தார்களோ அவற்றின் பக்கம் அநுரவின் பார்வையும் திரும்பியுள்ளது. மக்களின் வாக்குப்பலம் பெறாத சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்றினால் அவற்றுக்கான ஆயுட்காலம் சில மாதங்களே இருக்குமென்ற இவரது எச்சரிக்கை, அரசமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தினூடாக அச்சபைகள் வீழ்த்தப்படும் என்பதுதான். 

இந்த எச்சரிக்கை தமிழர் தாயகத்துக்கும்கூட பொருத்தப்பாடு உடையது. பல சிறிய கட்சிகளின் ஆதரவோடு சபைகளைத் தம்வசப்படுத்த தமிழரசுக் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இது சவாலாகவே அமையும். அநுர குமரவின் தம்மிஷ்டப்படியான இந்த எச்சரிக்கையை கொழும்பின் ஆங்கில பத்திரிகையான ஐலன்ட் ஷஅதிகார ஆணவம்| என்று சரியாகத் தலைப்பிட்டுள்ளது. 

இலங்கையில் இரண்டு தடவை பயங்கரவாதம் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து, இரண்டு தடவைகளும் தடைசெய்யப்பட்டு, சிங்கள அரசியல் கட்சிகளின் சீர்கேட்டினால் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி தனது திட்டம் என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. 

அநுர குமர மெதுமெதுவாக செயற்படுத்த விரும்பும் மாற்றங்களை தெரியப்படுத்துகிறார். இவைகள் முழுமையாக செயற்படுத்தப்படுமானால் இந்து சமுத்திரத்தின் குட்டித்தீவு தேர்தல்களற்ற, அரசியல் கட்சிகளற்ற, நவீன சோசலிஸ நாடாகலாம். யார் கண்டது?
 

No comments