அனுர அரசும் சமாளித்து செல்லுமாம்!



இலங்கை கடல்வளத்தையும், மீன்வளத்தை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனுர அரசாங்கம் உறுதியாக எடுக்கும் .

இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமாக தீர்க்கவே சமகால அரசாங்கம் விரும்புகிறது. அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் பேச்சுகளில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என எதிர்பார்க்கிறோம். அதனால் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் உயர்மட்ட நேரடி தலையீடுகள்; இருக்காது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய, இலங்கை மீனவர்களின் விவகாரம் எதிர்காலத்தில் சுமுகமாக தீர்க்கப்படும். சமகால அரசாங்கம் ஆரம்பத்திலேயே நேரடியாக உயர்மட்ட கலந்துரையாடல்களை இந்த விடயத்தில் மேற்கொள்ளப் போவதில்லை. இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் தற்போது பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுகளே சரியானதாக இருக்கும். அதனை சமகால அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அந்தப் பேச்சுளின் ஊடாக எதிர்காலத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும்.

டிசம்பர் நடுப்பகுதியில் இடம்பெறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் விடயம் தொடர்பில் அதிக முக்கியம் கொடுக்கப்படாது. பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இந்த விடயம் தொடர்பில் சாதாரண பேச்சுகள் இடம்பெறும்.

எவ்வாறாயினும் எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. எமக்குச் சொந்தமான கடற்பரப்பில் அத்துமீறும் செயல்பாட்டை நாம் எதிர்க்கிறோம். இந்திய அரசாங்கத்தின் சட்டங்களையும் மீறிதான் இந்திய மீனவர்கள் எமது கடல்பரப்பில் மீன்பிடிக்கின்றனர் எனவும் சந்திரசேகரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதனிடையே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.


No comments