சிங்கள பொது வேட்பாளராக ரணில்? திரண்ட தமிழ்த் தேசிய கட்சிகளின் தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? பனங்காட்டான்


அறகலய போராட்ட வேளையில் ஏற்றுக் கொண்ட பிரதமர் பதவியை விட்டு விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை எழுதினாலும், அதனைக் கையளிக்க அப்போதைய ஜனாதிபதி (கோதபாய) கப்பலில் தஞ்சம் புகுந்து நாட்டைவிட்டு ஓடியதால் முடியாது போனதாக புதுக்கதை அவிழ்க்கும் ரணில் விக்கிரமசிங்க, அவ்வழியாக வந்த ஜனாதிபதிக் கதிரையை தொடர்ந்து தக்க வைப்பதற்காக சிங்கள தேசிய பொதுவேட்பாளராக களமிறங்கப் போகிறாராம். 

இந்த வருடத்தில் நடைபெற வேண்டிய ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்து விட்டது. அச்சு வேலைகளுக்குத் தயாராக இருக்குமாறு அரசாங்க அச்சகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16க்குள் தேர்தல் இடம்பெறுமென ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அக்டோபர் 5இல் தேர்தலை நடத்த ரணில் விரும்புவதை அவரது ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து வருகிறது. 

தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு யூலை நடுப்பகுதியை அடுத்து வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. சஜித் பிரேமதாசவும், அநுர குமார திசநாயக்கவும் தங்கள் பரப்புரைகளை ஆரம்பித்துவிட்டனர். தமிழர் தரப்புடன் உரையாடும்போது 13வது திருத்தம், மாகாண சபை அதிகாரம் என்பவையே இவர்களால் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. ஆனால் தெற்கில் ரணிலை நேரடியாக இலக்கு வைத்து பரப்புரை இடம்பெறுகிறது. எல்லா வகையிலும் ரணிலை தோற்கடிக்க வேண்டுமென்பது இவர்கள் இருவரதும் இலக்காக உள்ளது. 

ரணில் தமது செயற்பாடுகளை வேகமாகவும் விவேகமாகவும் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னர், உறுமய திட்டத்தின் கீழ் மேலும் பல்லாயிரம் பேருக்கு காணி உரிமங்களை வழங்குவது இவரது முன்னுரிமை. 

ரணில் தேர்தலை நடத்துவாரா, பின்போடுவாரா, போட்டியிடுவாரா, இறுதி நேரத்தில் விலகுவாரா என்று வதந்திகள் பலவாறாக வந்தாலும், அவர் போட்டியிடுவார் என்பதற்கு சாதகமான சிலவற்றை அவதானிக்க முடிகிறது. சகல மாவட்டங்களுக்கும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக, இளையோரையும் மாணவர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி நம்பிக்கையை ஊட்டி வருகிறார். நாட்டை மீட்டதாகக் கூறுவதோடு வளமான எதிர்காலத்துக்கும் போதனை நிகழ்த்துகிறார். நேரடியாக எவரது பெயரையும் குறிப்பிடாது அவர்களின் செயற்பாடுகளை போலித்தனமானவை எனச் சாடுகிறார்.  கடந்த சில நாட்களாக புரியும் வகையில் தாம் போட்டியிடப் போவதை பின்வருமாறு வெளிப்படுத்தி வருகிறார். 

நீங்கள் என்னுடன் சேர்ந்து எதிர்காலத்தை முன்னேற்ற விரும்புகிறீர்களா? அல்லது இருட்டுக்குள் போராடுபவர்களுடன் போக விரும்புகிறீர்களா? என்னுடன் பயணிக்க விருப்பமுண்டா? அல்லது அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் குழுக்களுடன் பயணிக்க விரும்புகிறீர்களா? என்று கடந்த 24ம் திகதி ஆற்றிய உரையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது எதனைக் குறிக்கிறது?

எங்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை சர்வதேசத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளேன். இதனை மறுதலிக்கும் ஜனரஞ்சகவாதிகளின் சொல்லாடல்களில் ஏமாறப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் அர்த்தம் என்ன? (நாட்டை சர்வதேசத்திடம் மீள முடியாதளவுக்கு அடகு வைத்ததை மறைத்துவிட்டார்) 

கொழும்பின் தினசரி ஒன்றில் கட்டணம் செலுத்தி பெட்டி கட்டிய பிரமாண்ட விளம்பரம் ஒன்றின் வாசகம், 'இந்த நேரத்தில் ரணில்தான்!' என்று கச்சிதமான கவர்ச்சி வர்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இது எதற்காக?

இது போதாதென்று, 'நற்செய்தி வேண்டுமா, கெட்டசெய்தி வேண்டுமா' என்று பொதுமக்களுக்கு அச்சமூட்டும் கேள்வியை முன்வைத்துள்ளார் அமைச்சர் மனுஷ் நாணயக்கார. (சஜித் பிரேமதாச அணியிலிருந்து ரணில் பக்கம் தாவி அமைச்சர் பதவி பெற்ற இருவரில் இவர் ஒருவர்) ரணில்தான் நற்செய்தி தருவார் என்பதன் மறைவார்த்தை இது. 

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதை உறுதி செய்யும் வகையிலான இந்த அறிவித்தல்கள், பின்னால் வரும் யானையின் முன்னால் வரும் மணியோசை. 

பிரதமர் பதவியை அறகலய போராட்ட காலத்தில் தாம் ஏற்க வேண்டி நேர்ந்ததை சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை இளம் சட்ட வல்லுனர்களுடன் நடத்திய சந்திப்பில் எடுத்துக்கூறியபோது சுவையான புதுக்கதை ஒன்றை அறிய முடிந்தது. அதனை பின்வருமாறு கூறியிருந்தார். 

''அன்று பிரதமர் பதவியை யாரும் ஏற்க முன்வரவில்லை. ஜனாதிபதி (கோதபாய) கப்பலில் ஏறி திருகோணமலை சென்றபோது சிலர் என்னை பிரதமர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள். பெரும்பான்மை உள்ள ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் பதவி விலக முடியாது என்று கூறினேன். பதவி விலகுவதற்கான கடிதத்தை எழுதினாலும் அதனை ஜனாதிபதியிடமே கையளிக்க வேண்டும். ஜனாதிபதி (கோதபாய) கப்பலில் தஞ்சம் புகுந்திருந்த காரணத்தாலும், நாட்டைவிட்டு மாலைதீவுக்குச் சென்றதாலும் என்னால் அந்தக் கடிதத்தை வழங்க முடியாது போனது. அன்று நான் பதவி விலகியிருந்தால் ஜனநாயகத்துக்கு முரணாக எவராவது நாட்டைக் கைப்பற்றியிருப்பார்கள்." 

இந்தக் கூற்றில் விநோதமான விண்ணானம் தென்படுகிறது. ஜனாதிபதி (கோதபாய) நாட்டைவிட்டு ஓடியதால் தனது ராஜினாமா கடிதத்தை கையளிக்க வசதியில்லாது போனது என்று கூறுவது, நேற்றுப் பிறந்த குழந்தைகூட நம்பக்கூடியதாக இல்லை. அந்த இளம் சட்ட வல்லுனர்கள் எவ்வாறுதான் இந்தக் கூற்றை உள்வாங்கினார்களோ தெரியாது. 

எதுவோ, இப்போது அமர்ந்திருக்கும் அந்த ஆசனத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு தமதாக்கிக் கொள்ளும் அனைத்து வழிமுறைகளையும் ரணில் மேற்கொண்டு வருவது தெரிகிறது. அதற்காக தம்மால் முன்மொழியப்பட்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சபையுடனும், அரசியலுக்கு அப்பாற்பட்ட நீதிபரிலான சேவையுடனும்கூட நேரடியாக மோத ஆரம்பித்துள்ளார். 

இந்தப் பின்னணியூடாகப் பார்க்கையில் சிங்களத் தரப்பின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளிழுத்த நிரந்தரமில்லாத கூட்டின் வேட்பாளராக - இதனை சுயாதீன வேட்பாளர், பொதுவேட்பாளர், தேசிய வேட்பாளர் என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள் - களம் இறங்கும் அறிவித்தல் யூலை நடுப்பகுதிக்குள் வருவது நிச்சயம் என்கிறார்கள் அவரது ஐக்கிய தேசிய கட்சியினர். 

அதற்கு முன்னர் இன்னும் எவர் எவரை தம்பக்கம் வீழ்த்தலாம் என்பதில் ரணிலின் உள்வீட்டுக்காரர்கள் இரவு பகலாக ஓய்வின்றி ஓடித்திரிகின்றனர். சஜித் அணியின் முக்கியஸ்தரான போர்க்கால ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் நூல் வெளியீட்டில் ரணில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டதும், சரத்தை போர் வெற்றி நாயகன் என்று மகுடம் சூட்டியதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நாடகத்தில் ஓரங்கம். 

ரணிலை ஆட்சிக் கதிரையில் அமர்த்தி தங்களையும் காப்பாற்றி வரும் பொதுஜன பெரமுன ஒரு வேட்பாளரை இத்தேர்தலில் நிறுத்தும் நிலையில் இல்லை. கப்பலில் இருந்து பாயும் எலிகள் போன்று ரணிலின் பக்கம் ஓடுபவர்களை, முக்கியமாக அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர்களை தடுக்க முடியாத நிலையில் பெரமுனவே முழுமையாக ரணில் பக்கம் சாய வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளது. 

இவ்வாறான பல்வகைத் தன்மையுடன் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வேளையில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடும் சிங்களம் பொறுக்க முடியாது சில்லறைக் குழப்படிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. இதற்காக இரண்டு விடயங்களை இங்கு குறிப்பிட முடியும். 

சிங்களத் தரப்பு மூன்றாகப் பிளவுபடாது ஒருமனதாக ஒருவர் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்று சிங்கள பௌத்த பேராண்மையின் குரலாக இயங்கி வரும் உதய கம்மன்பில கூறியுள்ளார். 

முன்னாள் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி, தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் அரசியல் கூட்டமைப்பில் இருப்பதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த இரண்டு அறிவிப்புகளும் இனவாதத்தைக் கக்கும் செயற்பாடுகளே. சிங்கள தரப்பிலிருந்து ஒரு பொதுவேட்பாளர் என்ற கரு ஏன் உருவாக வேண்டும்? 1982 ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது உருவாகாத இவ்வாறான எதிர் மனப்பான்மை இப்போது ஏன் வர வேண்டும்?

தமிழ்ப் பொவேட்பாளர் என்ற சிந்தனை தமிழ் சிவில் செயற்பாட்டாளர்களிடமிருந்து வந்தது. இதனை எந்தத் தமிழ் அரசியல் கட்சியும் தமதாக்க முடியாது. தமிழ்த் தேசியம் என்ற கொள்கையிலான அனைத்துத் தமிழ் கட்சிகளும் இதனை ஏற்றுள்ளன. (இருவர் மட்டும் புறம்போக்காக உள்ளனர்) தமிழ்ப் பொதுவேட்பாளரை ஏற்றுக் கொண்டதால் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளும் இதனை முழு மனதுடன் ஆதரிக்கின்றனர். 

1971 சேகுவேரா புரட்சியின்போதும், 1987 ராஜிவ் - ஜே.ஆர். ஒப்பந்தத்தின்போதும் ஆயிரமாயிரம் மக்களைக் கொன்று குவித்து நரவேட்டை நடத்திய ஜே.வி.பி.யின் வேட்பாளராக அநுர குமார திசநாயக்க போட்டியிடுவதை எவரும் இதுவரை விமர்சிக்கவில்லை. ஆனால், தமிழினத்தின் விடுதலைக்காக அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பிய முன்னாள் போராளிகளை எதற்காக பிரித்துப் பார்த்து விமர்சிக்க வேண்டும்?

சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகள் அனைத்திலிருந்தும் உள்வாங்கப்படுபவர்களின் தேசிய - பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களம் இறங்குவதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். இப்போதைக்கு இது போதுமானாலும், தாமதமின்றி தமிழ்ப் பொதுவேட்பாளரை பெயர் சூட்டி களத்தில் இறக்குவது அவசியமாகிறது. தமிழ் சிவில் அமைப்புகள் இவ்விடயத்தில் வேகம் காட்ட வேண்டும். 

No comments