திரிப்போலி கொலையணியால் பயம்:சாணக்கியன்!



கிழக்கில் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் திரிப்போலி படையணி குழுவினர் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ள போதும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அக்குழுவினால் மக்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி சித்திக் சிபானி என்ற பெண்ணை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து அந்தப் பெண் தப்பியுள்ளார்.அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். 

கடந்த ஒருவருட காலத்தில் திரிப்போலி படையணி என்ற குழு தொடர்பிலும் அவர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் இந்தக் குழு லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புபட்டுள்ள முறை தொடர்பிலும் அடிக்கடி நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புடைய குழுவினரே இவர்கள். இவர்கள் அப்போது பயன்படுத்திய துப்பாக்கிகளும் இப்போது பயன்படுத்தும் துப்பாக்கிகளும் ஒன்றா என்றும் தெரியாது. இது பாரதூரமான பிரச்சினையாகும். நாங்கள் இந்தளவு தகவல்களை வெளியிட்டும் இதுவரையில் ஏன் விசாரணைகள் நடத்தப்படுவதில்லை.

அத்துடன் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கொலைகளுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பில் காத்தான்குடியிலுள்ள மொஹமட் தம்பி உவைஸ் என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு உள்ளிட்ட பல இடங்களில் தகவல்களை வழங்கியுள்ளார்.

அவரின் பாதுகாப்பு வலையமைப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் குழு தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


No comments