தூங்கிக்கொண்டிருத்தவரின் காலை மிதித்தவர் குத்திக்கொலை


பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பல நாள் மீன்பிடிப் படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் குழுவில் இருந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் மற்றுமொரு மீனவரை தாக்கி கொலை செய்துள்ளார்.

பேருவளை ரொக்லண்ட்வத்தை பகுதியைச் சேர்ந்த உபுல் சாந்த பெர்னாண்டோ என்ற 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த போது காலை மிதித்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் ஏனைய மீனவர்கள் இணைந்து கொலை செய்த மீனவரை கட்டிப்போட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'சஹன் புதா' என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த 9ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் கடலுக்குச் சென்றது.

180 கடல் மைல் தூரத்தில் படகு நின்றிருந்த போது, தூங்கிக் கொண்டிருந்த  மீனவர் ஒருவரின் காலை மற்றுறொரு மீனவர் தவறுதலாக மிதித்துள்ளார்.

அப்போது, ​​தூங்கிக் கொண்டிருந்த மீனவர் எழுந்து, அருகில் இருந்த கூரிய ஆயுதத்தால் காலை மிதித்த மீனவரின் வயிற்றில் தாக்கியதில் , மீனவர் உயிரிழந்துள்ளார். 

மீனவர் உயிரிழந்த நிலையில் மீனவ குழுவினர் சம்பவம் தொடர்பில் தாக்குதலாளியான மீனவரிடம் கேட்டுள்ளனர். அதன் போது உங்களையும் தாக்குவேன் என மிரட்டியுள்ளார்.

அதனை அடுத்து மீனவர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்த மீனவரை பிடித்து கட்டி வைத்து  கரைக்கு கொண்டு வந்தனர்.

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் சுமார் ஒன்றரை நாட்களாக கட்டி வைக்கப்பட்டிருந்ததாலும், சண்டை காரணமாக காயமடைந்ததாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments