சி.வி சிந்திக்கவேண்டும்:அங்கயன்!
தற்கால தமிழ் இளைஞர்களின் அரசியல் நிலைப்பாடு, தேவைகள், அபிலாசைகள் குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்திய கருத்தை, ஓர் ஏளனப்படுத்தலாக காட்டி தனது அரசியல் நலனை தக்கவைக்க சி.வி. விக்கினேஸ்வரன் முயற்சிக்கிறார் என மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
எமது இளைஞர்கள் எனக்கு வழங்கிய வாக்கு எண்ணிக்கையை ஏளனம் செய்வதானது, நமது இளைஞர்களின் நியாயமான அபிலாசைகளை நிராகரிப்பதாகவே அமைகிறது. அவரது இத்தகைய கருத்துக்கள் இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றம், கல்வி மறுமலர்ச்சி மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான வேலை வாய்ப்புகளுக்கான அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதெனவும் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சி.வி.விக்கினேஸ்வரனி;ற்குமிடையே இடம்பெற்ற சந்திப்பில், தமிழ் இளைஞர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வேலைவாய்ப்புதான் முக்கியமானது. கடந்த பொதுத்தேர்தலில் அங்கஜன் இராமநாதனுக்கு தமிழ் இளைஞர்கள் பெருவாரியாக வாக்களித்து அவரை யாழ் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பெற்று வெற்றிபெற செய்ததும் அங்கஜன் இராமநாதன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தருவதாக கூறியதன் அடிப்படையில்தான். எனவே நீங்கள் கொண்டுநடத்தும் அரசியல் அந்த இளைஞர்களுக்கு சரிவராது. நாற்பது வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு பொருளாதார நன்மைகள்தான் தேவை. நீங்கள் கூறுவது போல அரசியல் ரீதியான நன்மைகளை பெற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணம் தமிழ் இளைஞர்களிடம் இல்லை” என ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகுவதற்கு இது போன்ற புறக்கணிப்பு மனப்பான்மையே காரணம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர்களின் பொருளாதார தேவைகள் மற்றும் அபிலாசைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம், தமிழின வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு தலைமுறையை நாம் அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளதென அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
Post a Comment