காணி அதிகாரம் குத்தகையில் காவற்துறை அதிகாரம் கிடையாது பதின்மூன்று மைனஸ் ஆகிறது! பனங்காட்டான்
1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலஅம்சங்கள் காணி மற்றும் காவற்துறை அதிகார பரவலாக்கல். இந்த ஒப்பந்தத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கைச்சாத்திடும்போது அந்த அரசில் கல்வி அமைச்சராகவிருந்து முழுமையாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கியவர் அவரது பெறாமகனான ரணில் விக்கிரமசிங்க. இப்போது, தமது ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி காவற்துறை அதிகாரத்தைப் பறித்து காணிகளை லீசில் (குத்தகை) காணிக்காரர்களுக்கே வழங்க அவர் திட்டமிடுகிறார்.
தமிழ் பிரதிநிதிகள் சிலருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பொன்று பற்றி இரு தரப்பும் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், இங்கு இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி சில குறிப்பிடத்தக்க விபரங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் உருவான 13ம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி நடைமுறைப்படுத்துவது பற்றி இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவியை ஏற்ற காலத்தில், மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவேன் என்று கூறிய ரணில், பின்னர் படிப்படியாக அந்த நிலைப்பாட்டிலிருந்து தம்மை இறக்கி வந்துள்ளார். தமிழ்த் தேசிய கொள்கைசார் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பையும் மெதுமெதுவாக குறைத்து வந்தார்.
ஆனால், கடந்த வாரம் நடத்திய சந்திப்பில் இவ்விடயங்களை இறுக்கமாக அவர் சுட்டியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் என்பவை தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை முன்னரிலும் பார்க்க சற்று மாறி நேரடியாகவே தெரிவித்துள்ளார் எனலாம்.
கடந்த சில மாதங்களாகக் கூறி வந்த காவற்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படா மாட்டாதென்பதை இச்சந்திப்பில் அவர் அழுத்திக் கூறியுள்ளார். 'மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் கிடையாது" என்ற அவரது கூற்றின் மொழியூடான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு விளக்கம் தேவையில்லை.
13ம் திருத்தத்தில் இருக்கின்ற ஏதாவதொன்றை இல்லாமற் செய்வதென்றால் அதற்கு சட்டப்படி சில நடவடிக்கைகள் தேவை. நாடாளுமன்றத்தினூடாக நீக்குவதானால் மூன்றிலிரண்டு ஆதரவு தேவை. ஆனால், இந்த நடைமுறைகளை ஒதுக்கிவிட்டு ஜனாதிபதி பதவி வழியான தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும் நோக்கம் அவருக்கு இருக்கலாம்.
அரசியல் அமைப்புச் சபையையே மதிக்காது தம்மி~;டப்படி தாம் விரும்புபவைகளை செயற்படுத்தும் ரணிலின் அரசியற்போக்கு எங்கும் பிரசித்தமானது. அண்மையில் பொலிஸ் மாஅதிபராக தேசபந்துவை நியமனம் செய்தது நல்லதொரு உதாரணம். முதலில் அவரை பதில் பொலிஸ் மாஅதிபராக நியமனம் செய்தார். அந்தப் பதவிக்காலம் முடிய அவரையே பொலிஸ் மாஅதிபராக நியமித்தார்.
இதற்கு அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரம் தேவை. அதன் நான்கு உறுப்பினர்கள் நியமனத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இருவர் எதிர்த்து வாக்களித்தனர். இருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. வாக்களிப்பு எண்ணிக்கை சமநிலையில் வரும்போது மட்டும் சபாநாயகரின் வாக்கு முடிவைத் தீர்மானிக்கும். ஆனால், இந்த வாக்களிப்பில் சமநிலை ஏற்படவில்லை. எனினும், சபாநாயகர் யாப்பா அபேவர்த்தன எதிர்வாக்கு இரண்டையும் வாக்களிக்காத இரண்டையும் நான்காகக் கணக்கிட்டு, வாக்களிப்பு சமநிலையில் இருந்ததாக கருதி தமது வாக்கை ஆதரவுக்கு வழங்கி பொலிஸ் மாஅதிபர் நியமனத்தை அரசியலமைப்புச் சபை அங்கீகரித்ததாக முடிவெடுத்தார்.
இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சியினர் இப்பொழுது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். பொலிஸ் மாஅதிபர் நியமனத்தை ஜனாதிபதி விரும்புகிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு சபாநாயகர் பக்கம் சரிந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இவ்விடத்தில் ஜெனிவா மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மான வாக்கெடுப்பு கவனத்துக்கு வருகிறது. இலங்கை மீதான தீர்மானத்தின்போது தோற்றுப்போன இலங்கை அரசு வாக்கெடுப்பின் எண்ணிக்கையை வேறு விதமாக கணக்குக் காட்டி தனது முதுகை தானே தடவிக் கொடுத்து சிங்கள மக்களை பல தடவை ஏமாற்றியுள்ளது.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் வாக்களிப்புத் தகுதி சுழற்சி முறையில் 47 நாடுகளுக்கே உண்டு. இலங்கை மீதான தீர்மானத்துக்கு 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 14 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. இதனால், 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியதை ஜெனிவா பேரவை அறிவித்தது.
ஆனால், இலங்கை அரசு தீர்மானத்தை எதிர்த்த 11 உடன், வாக்களிப்பில் பங்குபற்றாத 14ஐயும் சேர்த்து, மொத்தம் 47 நாடுகளில் 22 மட்டுமே தீர்மானத்தை ஆதரித்தன, 25 நாடுகள் ஆதரிக்கவில்லையென்று அறிக்கை விட்டது.
இதுபோன்றுதான் பொலிஸ் மாஅதிபர் நியமனத்திலும் அரசியலமைப்புச் சபையின் வாக்களிப்பு ஜெனிவா பாணியில் கணக்கிடப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இங்கு விபரமாகக் குறிப்பிடுவதற்குக் காரணம், இதே பாணியில்தான் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் குழப்பகரமான வாக்களிப்புகள் மூலம் தமக்கு சாதகமாக்க ரணிலும் அவரது கூட்டமும் முனையலாம் என்பதற்கான முன்னெச்சரிக்கைக்காகவே.
தமிழ் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பில் ரணில் எடுத்துக்கொண்ட இரண்டாவது விடயம் மாகாண சபைகளின் காணி அதிகார விவகாரங்கள். காவற்துறை அதிகாரங்கள் கிடையாது என்ற அவரது கூற்றினூடாக, காணி அதிகாரங்களில் மாற்றமிருக்காது - அதாவது மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் இருக்கும் என்ற அர்த்தம் தொனித்தது.
ஆனால், இது தொடர்பாக அவர் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் வேறுவிதமானவை. தமிழர் தாயகத்தில் ராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று முன்னர் கூறிய ரணில், கஞ்சிக்குப் பயறு போடுவது போன்று ஆங்காங்கு சில காணிகளை விடுவித்து வந்தாராயினும் அதனை காணி விடுவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
அவ்வாறு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தங்கள் குடிமனை இருந்த இடத்தை அடையாளம் காணமுடியாது காணியின் சொந்தக்காரர்கள் திக்குமுக்காடுகிறார்கள். அவர்களின் வீடுகளையும் தோட்டங்களையும் காணவில்லை. சில வீடுகளின் கதவுகள், ஓடுகள், தளபாடங்கள் களவாடப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட பிரதேச ஆலயங்களில் விக்கிரகங்களைக் காணவில்லை. இவ்விடங்களுக்கு காணிக்காரர்கள் சென்றுவர ராணுவம் நேரக்கட்டுப்பாடு விதிக்கிறது. இவ்வாறு பல இன்னல்கள்.
எத்தனை இடைஞ்சல்கள் இருந்தாலும் தங்களின் காணிகளை மீளப்பெற விரும்பும் பொதுமக்களுக்கு இச்சந்திப்பில் ரணில் வழங்கிய செய்தி இதுதான்: 'காணிச் சொந்தக்காரர்களுக்கு இப்போது அவர்களின் காணிகள் லீசிங்கில் (குத்தகையில்) வழங்கப்படும்" என்பது. இதன் அர்த்தமானது - காணிச் சொந்தக்காரர்கள் தங்களின் காணிகளை அரசிடமிருந்து குத்தகைக்குப் பெற வேண்டும். அதாவது காணிகள் மீளளிக்கப்பட மாட்டாது. எவ்வளவு காலத்துக்கு குத்தகை தொடரும் என்பதற்கும் நம்பிக்கை தரும் அறிவிப்பு இல்லை. அப்படியானால் தொடர்ந்தும் இந்தக் காணிகளை ராணுவத்தினரே மேற்பார்வை செய்யலாம் என்பது இந்தக் கூற்றினூடாக வெளிப்படுகிறது.
ஜனாதிபதி என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த காணி, காவற்துறை அதிகாரங்களின்மை என்பவை இயங்காத மாகாண சபைகளுக்கு எதற்காக என்ற கேள்வி எழுகிறது. காணி அதிகாரங்கள் இப்பொழுது தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. சொல்லப்போனால் இந்தத் திணைக்களம் தனியொரு சிங்கள பௌத்த அரசாக இயங்குகிறது. குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, மட்டக்களப்பு மயிலத்தனை தரை, தையிட்டி பௌத்த விகாரை அமைப்பு என்ற தமிழர் தாயகத்தின் சகல இடங்களிலும் தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக இயங்குகிறது. இதற்கு உடந்தையாக காவற்துறையும் ராணுவப் படைத்தரப்பும் உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலுக்கு மகாசிவராத்திரி வழிபாட்டுக்குச் சென்ற பூசகர்களுக்கும் அடியவர்களுக்கும் என்ன நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்தது. நீதிமன்ற அனுமதியையே காவற்துறை உதாசீனம் செய்யும் அரச இயந்திரம் ரணில் ஆட்சியில்.
காங்கேசன்துறை தையிட்டியில் எந்த அனுமதியும் பெறாது பௌத்த விகாரை கட்டுவதற்கு மக்கள் தொடர் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இப்போது ராணுவம் புதிய கதையொன்றை அவிட்டு விட்டுள்ளது. 1960ம் ஆண்டில் இக்காணிகளில் 406 சிங்களவர்கள் வாழ்ந்ததாகவும், இக்காணிகள் அவர்களுக்குச் சொந்தமானது எனவும் ராணுவத்தரப்பால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது.
1960களில் எந்தச் சிங்களவர் இங்கே இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்பதை அடுத்து வரும் இன்னொரு பத்தியில் விரிவாக நோக்குவோம்.
Post a Comment