இயக்க அரசியலில் இயைந்து இணக்க அரசியலில் பிணைந்த தமிழரசு இன்று தள்ளாடுகிறது! பனங்காட்டான்


தமிழ் மக்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டுமென எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வநாயகம் அவர்கள் எடுத்துக் கூறியது, இப்போது அவர் உருவாக்கி வழிநடத்திய தமிழரசுக் கட்சிக்கே பொருத்தமாகியுள்ளது. 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று வருடாவருடம் சொல்லுவது வழக்கமாகி விட்டது. தமிழர் வாழ்வில் எந்தவொரு தை மாதமும் அவர்களுக்கான வழியைப் பெற்றுத்தந்ததாக இல்லை. அதற்கான வழியைக் காட்டியதாகவும் காணப்படவில்லை. 

மாறாக, தை மாதம் ஈழத்தமிழர் வாழ்வில் பல சவால்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு முன்னால் காட்சி தரும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் சின்னம் தை மாதத்தை நினைவு கூரும் முக்கியமான அடையாளம். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளிளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரெலோவும் புளொட்டும் 2023 தை மாதத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கின. ஒரு வருடத்துக்குள் இவர்களும் உருப்படியாக எதனையும் செய்ததாக இல்லை. 

ரெலோவையும் புளொட்டையும் வெளியேறும் நிலைக்குத் தள்ளிய தமிழரசுக் கட்சி தனிப்பெரும் கட்சியாக எதையாவது சாதிக்குமா என்று பார்த்தால், கிடைத்திருப்பது தலைமைக்கான நீயா நானா போட்டி, வடக்கையும் கிழக்கையும் அதிகார ரீதியாக பிரிக்கும் நிலைமைஇ உள்வீட்டுக் குழறுபடிகள் அல்லது கழுத்தறுப்புகள் என்பவைதான் எஞ்சியுள்ளன. 

பிறக்கப்போகும் தை மாதம் கட்சியின் புதிய தலைவர் தெரிவு நடைபெற தீர்மானிக்கப்பட்ட காலம். முதன்முறையாக இதற்கும் போட்டி - அதுவும் மும்முனைப் போட்டி. எவரும் விட்டுக் கொடுப்பதாக இதுவரை இல்லை. போட்டியிடும் மூவருமே 2010ம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்கள். 

இம்மூவரில் சிறீதரனும், யோகேஸ்வரனும் முறையே யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். சுமந்திரன் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் ஆனவர். இவர் முழுக்க முழுக்க கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனின் தெரிவு. 

கட்சியின் முன்னேற்றம், வளர்ச்சி, எதிர்கால நோக்கு என நல்நோக்குடன் சம்பந்தனால் இறக்கப்பட்ட மூவரில் இன்று எவருமே அவருக்கு விசுவாசமாக இல்லை. வடக்கின் முதலமைச்சராயிருந்த சி.வி.விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருமலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ச.குகதாசன் ஆகியோரே இவர்கள். 

இவர்களில் முதல் இருவரும் கொழும்பிலிருந்தும், மூன்றாமவரான குகதாசன் கனடாவிலிருந்தும் இறக்கப்பட்டவர்கள். விக்கினேஸ்வரன் நேர்மையாக வெளியேறி புதிய கட்சியை உருவாக்கி நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். ஆனால், மற்றைய இருவரும் இன்று சம்பந்தனின் இருப்புக்கும் தலைமைக்கும் உள்ளிருந்து குழி தோண்டிக் கொண்டிருப்பவர்கள். 

தை மாதத்தில் இடம்பெறவிருக்கும் தமிழரசு தலைவர் தெரிவுப் போட்டிக்கு தமக்கு சாதகமான வகையில் சில கட்சிக் கிளைகளின் உறுப்பினர் தெரிவை சுமந்திரன் நடத்தியமையும், இதற்கு உடந்தையாக திருமலை மாவட்டத்தில் குகதாசன் செயற்பட்டமையும் ஏற்கனவே வெளிச்சத்துக்கு வந்த விடயங்கள். 

திருமலை மாவட்ட வட்டார, தொகுதிக் கிளைகளுக்கான தெரிவின்போது தமது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவரும் திருமலை நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் அளவுக்கு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. திருமலைக் கிளைகளை மீள புனரமைக்காமல் (கவனிக்கவும் மீள புனரமைக்காமல்) தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாமென கட்சியின் மூத்த தலைவர் வேண்டுமளவுக்கு அங்கு ஊழல் இடம்பெற்றுள்ளது என்பது இதனால் தெரியவந்துள்ளது. 

இந்தச் சர்ச்சைக்கு இறுதி முடிவு காண்பதற்காக தை மாதம் 10ம் திகதி சம்பந்தனின் வீட்டில் அரசியல் குழுவின் முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஊடகச் செய்திகள் அறியத்தருகின்றன. இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு தினசரி இந்த மாதம் 29ம் திகதி வெளியிட்ட முதற்பக்க தலைப்புச் செய்தி பலராலும் முணுமுணுக்கப்பட்டு வந்த ஒரு விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்தப் பந்தி பின்வருமாறு:

'திருகோணமலை மாவட்டத்திலுள்ள கட்சியின் வட்டார, தொகுதிக் கிளைகளுக்கான தெரிவில் கனடாப் பணம் தாராளமாக விளையாடி முறையற்ற விதமாக நியமனங்கள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து, இரா.சம்பந்தனைத் தவிர்த்து குகதாசனை முன்னிறுத்த ஒரு தரப்பு முற்படுவதையடுத்து கட்சியின் தேசிய மாநாடு விவகாரம் சர்ச்சையானது" என்று ஈழநாடு செய்தி தெரிவிக்கிறது. 

குகதாசன் கனடாவில் இருந்தபோதே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் கனடாவிலுள்ள கட்சியின் அமைப்பொன்று இவ்விடயத்தில் செயற்பட்டு வந்ததாகவும் பேசப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். கனடாவில் இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றிலிருந்து சுமந்திரன் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து காவற்துறையினரின் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட நிகழ்வு போன்ற பலவற்றை இதற்கு இணைந்ததாகக் குறிப்பிடலாம்.

இவ்வாறான பின்னணியிலேயே இறுதியாக சம்பந்தப்பட்ட சம்பந்தன் களத்தில் இறங்கியுள்ளார் போலத் தெரிகிறது. திருமலைக் கிளைகளை மீளப் புனரமைக்காமல் - அதாவது சுமந்திரனுக்கு இசைவாக இயங்கக் கூடியவாறு குகதாசனால் நடத்தப்பட்ட அங்கத்தவர் தெரிவு சீர்கேட்டை நிவர்த்தி செய்யும்வரை, தேசிய மாநாட்டை நடத்த வேண்டாமென கடித மூலம் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அரசியல் குழுக் கூட்டத்தை ஜனவரி பத்தாம் திகதி தமது இல்லத்தில் நடத்த சம்பந்தன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். 

தமிழரசுக் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் அனைத்தும் சரியானவையாக ஏற்க முடியாத நிலையிலும், தனித்துவமான ஒரு தலைமையாக இக்கட்சி வடக்கு கிழக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இதன் செயற்பாட்டின் பலவீனத்தால் கடந்த தேர்தலில் ஆறு உறுப்பினர்களை மட்டுமே தமிழரசால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்ய முடிந்தது. 

யாழ்ப்பாணத்தில் சிவஞானம் சிறீதரனுடன் இணைந்திருக்காவிட்டால் சுமந்திரனால் வெற்றி பெறுவது கேள்விக்குறியாக இருந்திருக்கும். முன்னர் மகிந்த அணியினரின் கட்சியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட சாணக்கியனை தமிழரசுக் கட்சியில் இணைத்ததும் சுமந்திரன்தான். இதனால் மட்டக்களப்பின் தமிழரசுப் பிரமுகர்கள் பலரும் முன்னாள் எம்.பிக்களாயினர். 

சுமந்திரனின் தந்திர முயற்சியால் கலையரசன் தேசிய பட்டியல் ஊடாக தெரிவாகி அம்பாறை மாவட்டத்துக்கு நியமனமானார். திருமலை எம்.பியான சம்பந்தனைவிட குகதாசனே வேண்டப்பட்டவராக இருப்பதை அண்மையில் சம்பந்தன் பதவி விலக வேண்டுமென்று சுமந்திரன் விடுத்த வேண்டுகோளினூடாக நோக்கலாம். 

இப்போது அதே குகதாசன் தம்மை திருமலை அரசியலுக்கு அழைத்து வந்த சம்பந்தனுக்கு எதிராக சுமந்திரனுடன் சேர்ந்து முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளினால் கட்சியின் தேசிய மாநாட்டையும் புதிய தலைவர் தெரிவையும் பின்னகர்த்த வேண்டிய நிலைமை வந்துள்ளது. 

நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்னர் சம்பந்தன் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருப்பதுபோலத் தெரிகிறது. பிரச்சனை கையை விட்டுப் போவதற்கு முன்னர் நிலைமையைச் சீராக்க வேண்டுமானால் இவருக்கு சில தெரிவுகள் உண்டு. 

தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தக்கூடியதாக மாறியிருக்கும் அதற்கான தலைவர் பதவிக்கான போட்டியை நிறுத்த வேண்டும். அதற்கான வழி தலைவர் தெரிவை காலவரையின்றி ஒத்தி வைக்கலாம். முடிந்தால் அடுத்த பொதுத்தேர்தல்வரை இதனை பின்போடலாம். 

அதுவரை காலத்துக்கும் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவை அப்பதவியில் தொடர அனுமதிக்கலாம். தமது கட்டுப்பாட்டுக்குள் மாவை சேனாதிராஜா எப்போதும் இருப்பார் என்ற நம்பிக்கை சம்பந்தனுக்கு இருப்பதால் இது சாத்தியப்படக்கூடும். 

இது தொடர்பாக கொழும்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் பிரதான ஆதரவாளர் ஒருவருடன் உரையாடியபோது அவர் ஒரு தகவலைத் தெரிவித்தார். எவ்வகையிலாவது தலைவர் தெரிவுப் போட்டியை நிறுத்துவதற்கு சம்பந்தன் நடவடிக்கை எடுப்பாரென்பது சுமந்திரனுக்கு ஏற்கனவே தெரியுமென்றும், அதனாலேயே இவ்வேளையில் நாட்டைவிட்டு வெளியே சென்றுள்ளாரென்றும் அவர் தெரிவித்தது உண்மையாக இருக்கலாம். 

அண்மையில், டான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தலைமைப் பதவி வேட்பாளர்களில் ஒருவரான சிவஞானம் சிறீதரனும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அரசியல் குழுக் கூட்டத்தின்போது சில முடிவுகள் (மாற்றங்கள்) ஏற்படலாமென சைகை காட்டியிருந்தார். இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில் சிறீதரனிடம் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இடம்பெறுமென்ற நம்பிக்கை முழுமையாக இருக்கவில்லை. 

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டது போன்று புதிய தலைவர் பதவியை கிழக்குக்கு வழங்கி செயலாளர் பதவியை வடக்குக்கு கொடுத்தால் கிழக்கு மாகாண கட்சி ஆதரவாளர்கள் திருப்தி அடைவார்கள். 

2000ல் இயக்க அரசியலுடன் இயைந்து சென்று, பதினைந்து ஆண்டுகளின் பின்னர் சிங்கள இணக்க அரசியலுடன் இணைந்த  தமிழரசுக் கட்சிக்கு ஏமாற்றமே கிடைத்தது. அதிலிருந்து விடுபட்டு  கட்டத்துக்குச் செல்ல முடியாத தள்ளாட்டத்தில் கட்சி திண்டாடுகிறது. 

தமிழ் மக்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டுமென எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் தந்தை செல்வநாயகம் அவர்கள் எடுத்துக் கூறியது, இப்போது அவர் உருவாக்கி வழிநடத்திய தமிழரசுக் கட்சிக்கே பொருத்தமாகியுள்ளது. 

No comments