மேலுமிரு அரசியல் கைதிகள் விடுதலை!
தென்னிலங்கை சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மேலுமிரு தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்வத்துரை கிருபாகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதன்சேகர் மற்றும் கிருபாகரன் ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், மார்ச் 29, 2023 அன்று அவசரகால விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மதன்சேகர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களில் கிருபாகரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த போதிலும், 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதியினால் அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில், இருவரும் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதாக சிறைச்சாலைத் திணைக்கள அறிக்கையின் ஆதரவுடன் இருவருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment