மட்டக்களப்பில் கறுப்பு பொங்கல்!
மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஸ்டித்து மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை மீட்பு போராட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (16) மட்டக்களப்பு நகரில் முன்னெடுத்திருந்தனர்.
அவர்களிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேய்ச்சற்தரைப் பகுதியில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் அயல் மாவட்ட சிங்களவர்களால் கால் நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு ஏற்படுத்தப்படும் இன்னல்கள், அழிவுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும்,; அத்துமீறிய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அகற்றி தங்கள் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் 124 நாள் கடந்துள்ள நிலையில் 124 பொங்கல் பானைகளை கறுப்பு நாடா கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
பச்சைத் தரை எங்கும் இரத்தக் கறை என்ற மகுடவாசகத்துடன் பண்ணையாளர்கள் மேலாடையின்று 126 வெற்றுப் பொங்கல் பாணைகள் சகிதம் குறித்த ஆர்ப்பாட்டம் காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி பின்னர் பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று முடிவடைந்திருந்தது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர்.
மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்களால் இதுவரை 254 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment