வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை


வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன், தாக்குதலுக்கு இலக்காகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதனாலயே மரணம் சம்பவித்தது என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் யாழ்.நீதவான் நீதிமன்றில் தோன்றி மன்றில் தனது சாட்சியங்களை பதிவு செய்துள்ளார். 

அதன் அடிப்படையில் இதுவொரு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்துள்ளது என மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா வழக்கு விசாரணையின் முடிவில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு ,சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்தது , யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.  

கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோதனை யாழ்.போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது , நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்று இருந்தார். 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் ,

 சிறைச்சாலை அத்தியட்சகர் , சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலையான இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் உள்ளிட்ட ஐந்து பேர் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்தனர்.

சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம் அளிக்கையில் , 

உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் இருந்த காயங்கள் தொடர்பில் அதனை விபரித்தார். அத்துடன் காயங்கள் தொடர்பிலான தனது அபிப்பிராயங்களையும் மன்றில் தெரிவித்து , சிறுநீரகம் பாதிப்பினால் தான் மரணம் சம்பவித்தது என மன்றில் தெரிவித்தார். 

உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மூன்றாவது சாட்சியமாக தனது சாட்சியத்தை வழக்கும் போது , 

தன்னையும் பொலிஸார் அடித்து துன்புறுத்தி சித்திரவதை புரிந்தார்கள் என கூறினார். 

அதன் போது அவர்களை அடையாளம் காட்ட முடியுமா என மன்று வினாவிய போது , ஆம் என பதிலளித்த சாட்சி இருவரின் பெயர்களை குறிப்பிட்டு அடையாளம் கூறியதுடன் , ஏனைய மூவர் தொடர்பிலான அடையாளங்களையும் கூறினார். 

அதன் போது பொலிஸார் , சாட்சியம் கூறியவர் கூறியவர்களில் நால்வரை ஏற்கனவே தமது உள்ளக விசாரணைகளின் அடிப்படையில், இனம் கண்டு உள்ளதாகவும், இன்றைய தினம் சாட்சி கூறிய மற்றைய நபரையும் தாம் தமது பாதுகாப்பில் எடுப்பதாகவும் பொலிஸார் கூறினார். 

ஐவரையும் கைது செய்ய உத்தரவு 

அதற்கு மன்று , சாட்சி பெயர் குறிப்பிட்டு கூறிய இருவரையும் , அங்க அடையாளங்களை கூறி, கூறிய மற்றைய மூவரையும் உடனடியாக கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு கட்டளையிட்டது. 

அதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் தனது சாட்சியத்தின் போது , பொலிஸார் தன்னை பல இடங்களுக்கு அழைத்து சென்று இருந்ததாகவும் கூறினார்.

விஞ்ஞான ரீதியான சான்றுகளை பெற கட்டளை 
 
பொலிஸார்,  சாட்சியை கூட்டி சென்ற இடங்களை சாட்சி மூலம் அடையாளம் காணுமாறும் , அங்கு விஞ்ஞான ரீதியான சான்றுகள், தடயங்களை சேகரிக்கவும் மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டது. 

அதன் போது , பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , பொலிஸாருடன் தனியே சாட்சியை அனுப்ப கூடாது. சட்டத்தரணிகள் இருவரையும் சாட்சியுடன் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மன்று ஏற்றுக்கொண்டது. 

பயண தடை விதிக்க கோரிக்கை. 

அத்துடன் சந்தேகநபர்களான மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேறாது இருக்க பயண தடை விதிக்க வேண்டும் என சட்டத்தரணிகள் கோரினர். 

மன்று பயண தடை விதிக்கவில்லை என்றும், அவர்கள் யாரும்  நாட்டை விட்டு வெளியேறாத வாறு பொலிஸ் திணைக்களம் உத்தரவாதம் வழங்கும் என மன்று தெரிவித்தது.

திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைப்பு 

வழக்கினை விரைவாக கொண்டு நடத்தும் விதமாக குறுகிய திகதியிட வேண்டும் என சட்டத்தரணிகள் கோரியதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மதியம் வழக்கு அழைக்கப்படும் என அன்றைய தினத்திற்கு மன்று வழக்கினை ஒத்திவைத்துள்ளது. 

சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments