யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் கோட்டப்பொறுப்பாளர் காலமானார்
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் யேர்மனி கால்ஸ்றூகவை (Karlsruhe) வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை செந்தில்விநாயகன் கடந்த புதன்கிழமை 23-08-2023 அன்று காலமானார். அவரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை 31-08-2023 அன்று நிறைவடைந்தன.
இவர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிக் கிளையின் முன்னாள் செயற்பாட்டளராகவும், கோட்டப் பொறுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
யேர்மனிக்கிளையில் நீண்டகாலச் செயற்பாட்டாளராகவும் 2003 ஆண்டுக்குப் பின்னர் கோட்டப் பொறுப்பாளராகவும் தயாக விடுதலைப் போராட்டத்திற்கான பணியைத் தொடர்ந்திருந்தார். யேர்மனியில் தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் இணைப்பதிலும், ஆயுதப் போராட்டத்திற்கு நிதி திரட்டுவதிலும், இளைய தலைமுறைக்கு தமிழ்க் கல்வியை ஊக்குவதிலும், புலம்பெயர்ந்து வரும் தமிழ் ஏதிலிகளை வரவேற்று அவர்களுக்கான உதவிகளை வழங்குவதிலும் கால்ஸ்றூக நகரத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு தாயகத்தில் நடைபெற்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கோட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட பட்டறையிலும் கலந்துகொண்டதுடன் அதே பட்டறையில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கெடுத்து அவரின் கருத்துக்களையும் எண்ணங்களையும் உள்வாக்கி வந்து யேர்மனியில் தனது தயாகப் பணியைத் தொடர்ந்தவர்.
இடது பக்கத்தில் சிறப்புத் தளபதி வேலவன் வலது பக்கத்தில் முன்னாள் காவல்துறைப் பொறுப்பாளரும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோருடன் தாயகத்தில் செந்தில்விநாயகன் |
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அனைத்து நிதி திரட்டல் நடவடிக்கையிலும் யேர்மனியின் தென்பகுதியில் சளைக்காது தனது கடமைகளை இறுதி யுத்தம் வரை செய்து முடிந்தவர்.
2006 ஆண்டு தமிழர் தேட்டம் எனும் நிதித் திட்டத்தில் யேர்மனிக் கிளைக்கு வழங்கப்பட்ட இலக்கை எட்டி முடித்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கம் அவருக்கும் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.
யேர்மனிக்கு வந்து பின்னர் தாயகத்தில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் பலரும் அவரின் வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுத்தும், உணவு அருந்தியும் சென்றிருந்தனர். அவரின் வீட்டில் சில போராளிகள் மாதக்கணக்கில் தங்கியிருந்து வந்திருந்து வேலைகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் வரை மாவீரர் குடும்பமான அவரின் குடும்பம், போராளிகளை கண்ணும் கருத்துமாக கவனித்திருந்தது.
தமிழர் தேட்டம் நிதித்திட்டத்தை நிறைவு செய்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட புலிச்சின்னப் பதக்கம் அணிவித்து யேர்மனியில் மரியாதை செலுத்தப்பட்டபோது |
யேர்மனியில் அவர் மூன்று தசாப்தங்களாக வாழ்ந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியவர் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு யேர்மனிக் குடியுரிமை சாகும் நிமிடம் வரைக்கும் வழங்கப்படவில்லை.
முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனித்த பின்னர் 2010 ஆண்டு வரை பணியாற்றியிருந்தாலும் அவருக்கு அன்றைய காலத்தில் ஏற்பட்ட வதிவிட விசா வழங்குவதற்கு கடவுச்சீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி அவர் இறுதிவரை தனது போராட்ட வாழ்க்கையில் ஒதுக்கியிருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.
Post a Comment