யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் , மாவட்ட செயலர் , பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்திப்பில் , 

யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு , கட்டணங்களை வசூலிக்கின்றன. 

அதனால் நீண்ட காலமாக சேவையில்  ஈடுபடும் எமது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நாம் பெரும் தொகை பணத்தினை செலவழித்து மீற்றர் கருவியை பொருத்தினோம். அப்படியிருந்தும் அந்நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிக சேவைகளில் ஈடுபடுவதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். 

அதற்கு பதில் அளித்த மாவட்ட செயலர் , சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மீற்றர் பூட்டுவது என்பது கட்டாயம். அதனையே நாமும் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம். 

அதேவேளை உரிய அனுமதிகளை பெற்று  சேவையில் ஈடுபடும் எந்த முச்சக்கர வண்டிகளையும் தடுக்க முடியாது. அத்துடன் , போக்குவரத்து சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்தை தடுக்கும் அதிகாரம் இல்லை. 

மீற்றர் பொருத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொதுமக்களால் தினமும் முறைப்பாடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இதுவரையில் எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். 

No comments