பொங்கல் பொங்கியாயிற்று!

குருந்தூர்மலையில் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றமையால் இன்று பதற்ற நிலை தோன்றியிருந்தது.

தொல்பொருள் திணைக்களத்தின் கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில் குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சிங்கள மக்கள் வருவிக்கப்பட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என தெரிவித்து நூற்றுக்கணக்கான காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்;.

புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என காவல்துறையினரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்திருந்த நிலையில் பதட்டத்தின் மத்தியில் இன்றைய இந்துக்களது பொங்கல் நடந்து முடிந்துள்ளது.


No comments