உடுவிலில் 54 வயது நபரை அடித்துக்கொன்ற குற்றம் ; 06 பேர் மறியலில் - மேலும் 2 பேர் கைது


காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய நபரை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 06 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய நபர் , 19 வயது யுவதியுடன் காதல் வயப்பட்டு, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு ஊரில் வசித்து வந்துள்ளனர். 

அந்நிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக வீட்டார் உறுதி அளித்து , இருவரையும் ஊருக்கு அழைத்து, மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அதில் 54 வயதுடைய காதலன் உயிரிழந்துள்ளார். யுவதி காயங்களுடன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை  06 பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை 06 பேரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

அதை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , 06 பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். 

அதேவேளை சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சுன்னாகம் பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments