டெலோவின் சீனி இனிப்பு ஆபத்து!

 


“வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விசம்” என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். 

எனினும் சீனித்தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 

“இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பான தமிழீழ விடுதலை இயக்கம், போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென கிடைத்த வரப்பிரசாதம்  என பிரச்சாரமும் செய்துவருகின்றது.

“கரும்பினதும் சீனியினதும் நீர் அடிச்சுவடு மிகவும் உயர்வானது. ஒரு கிலோகிராம் கரும்பை உற்பத்தி செய்வதற்கு 210 இலீற்றர் தண்ணீரும் ஒரு கிலோகிராம் சுத்திகரிக்கப்பட்ட சீனியை உற்பத்தி செய்வற்கு 1780 இலீற்றர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கரும்பு வருடம் முழுவதும் நீர் பாய்ச்ச வேண்டிய ஒரு பல்லாண்டுப் பயிருமாகும். 

“இவற்றின் அடிப்படையில், பேராறுகள் எதுவுமே இல்லாத வறண்ட வலயமான வடக்கில் பெருமளவு நீரை விழுங்கும் சீனி உற்பத்தியை முன்னெடுப்பது பேராபத்தாகும் எனவும் ஜங்கரநேசன் எச்சரித்துள்ளார். 

கரும்புச் செய்கைக்கும் சீனித்தொழிற்சாலைக்கும் ஒதுக்கப்பட்ட காணியின் அளவு வவுனியாவின் மொத்தப்பரப்பில் ஆறு விழுக்காடுக்கும் அதிகம். இந்தப் பாரிய இடத்தைக் காடுகளை அழித்தே பெறமுடியும். 

“மக்கள் போரினால் இடம்பெயர்ந்ததன் காரணமாகக் கைவிடப்பட்ட மேயிச்சல் தரைகளையெல்லாம் அங்கு மரங்கள் வளர்ந்ததைக் காரணங்காட்டிக் காடுகள் என எல்லைகள் போட்ட வனவிலங்குத் திணைக்களம் இப்போது அதே காடுகளை கரும்புச் செய்கைக்கு விடுவிப்பதற்கு இணங்கியுள்ளது. 

 “போரால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் வாழ்வை மேம்படுத்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம். ஆனால், வடக்கின் மண்ணுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையோ இருக்கும்போது எவ்வித்திலும் பொருந்தாத சீனித் தொழிற்சாலையை வரவேற்பது கேலிக்குரியதெனவும் ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


No comments