தொல்லியல் தொல்லையே!

 


கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை இலங்கை தொல்லியல் திணைக்களத்திடம் வழங்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் அதனை கேள்விக்குள்ளாகியுள்ளார் ஆய்வாளர் ஒருவர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொல்லியல் திணைக்களம் செய்துவரும் பணிகள் குறித்து கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டுவரும் நிலையில், இறுதிப் போர் வேளையில் சரணடைந்த பெண் போராளிகளது உடலங்களாக இருக்கும் எனச் சந்தேகிக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியை அகழ்ந்து, உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை தொல்லியல் திணைக்களத்தைக் கோருவதும், கொன்றவனையே நீதிபதியாக நியமிக்கப்பதற்கும் வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இலங்கையின் தொல்லியல் திணைக்களத்திடம் இருக்கும் விஞ்ஞானபூர்வமான வலு பௌத்த மரபுரிமை இடங்களைக் கண்டுபிடிக்கவும், உருவாக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் மட்டுமே போதுமானது என்பதை அத்திணைக்களத்தினது பேஸ்புக் பின்தொடர்ந்தாலே புரிந்துகொள்ளமுடியும். 

பல்லினங்கள் வாழும் சூழலில் ஓரினத்தை மட்டுமே முதன்மைப்படுத்துவதும், அதனை நியாயப்படுத்துவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் கூடிய அறிவைத் தாண்டி அது வளரவில்லை. தொல்லியல் துறை முற்றுமுழுதான அறிவியல் – விஞ்ஞான துறையாக வளர்ந்து நிற்கின்ற இன்றையநிலையில், இலங்கை தொல்லியல் திணைக்களமோ மகாவம்சம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுக்கு வலுச்சேர்க்கும் ஓர் அமைப்பாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனிடத்தில் ஒரு விஞ்ஞானகூடத்தில் இருக்கவேண்டிய அறிவும், கருவிகளும் இருப்பதில்லை. ஒரு மத வள நிலையத்திடமிருக்கும் போதனைகளும், அருள்வாக்குகளும்தான் உண்டு. இவ்வாறானதொரு திணைக்களத்தை நம்பி, நீதி கோரி போராடிக்கொண்டிருக்கும் இனமொன்று, அவ்வினம் அழிக்கப்பட்டமைக்கான தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியைக் அத்திணைக்களத்திடம் கொடுப்பது பொறுத்தமானதா? 

மன்னாரில் சதொச கட்டட அமைப்புக்கான அத்திவாரம் தோண்டப்பட்டபோது வெளிவந்த மனித எச்சங்கள், அவ்விடத்தில் பாரிய மனிதப் புதைகுழி உள்ளது என்பதை வெளிச்சமிட்டது. அதன் பின்னர் அந்தப் பாரிய மனித புதைகுழியையும் அகழ்ந்து ஆய்வு செய்யும் பொறுப்பு இலங்கை தொல்லியல் திணைக்களத்திடமே சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுக்கு என்னவாகியது என்பது நம் அனைவருக்குமே தெரியும். பிஸ்கட் பையோடும், இறக்காத இரும்போடும் பிணைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகளை மீட்டு, அவையெல்லாம் இற்றைக்கு 350 வருடங்களுக்கு முற்பட்டவை என நிறுவினர். 

மன்னார் புதைகுழி விடயம் போலவேதான், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்திலும் எழும் சந்தேகங்கள் வலுவானவை. மன்னாரைப் போலவே முல்லைத்தீவிலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், வெளிப்படைத்தன்மையான, விஞ்ஞான ரீதியான, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய புதைகுழி அகழ்வைக் கோருகின்றனர். அவர்களது ஐயத்திலும், கோரிக்கையிலும் நியாயமுள்ளது. ஆக அந்த நியாயத்தின்பால் நின்று கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வினை சர்வதேச கண்காணிப்புடன் கூடிய சுயாதீன அமைப்பொன்றிடம் விடுவதே பொறுத்தமானதாக அமையும்.

No comments