ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை


ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டணிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டு அவரவர் யோசனைகளை முன்வைத்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த ஆர்.ராகவனும் ஊடகப் பேச்சாளராக சுரேஸ் பிறேமச்சந்திரநும் தேசிய அமைப்பாளராக கோவிந்தம் கருணாகரனும் பொருளாளராக க.துளசியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments