இந்தியா மீளுருவாக்கத்தில் ஈடுபடுகின்றதா?

 


விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என இலங்கை அரசு சந்தேகம் எழுப்பியுள்ளது. கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மீள் உருவாக்கம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து எனது வீட்டிற்கு வந்து என்னை விசாரித்தார்கள். விசாரணையின் பின்னர் 15ஆம் திகதி மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்கள்.

எனினும் கட்சி பணிகள் உள்ளதால் அத்திகதியில் என்னால் வரமுடியாது பிறிதொரு திகதியில் வருவதாக கூறியிருந்தேன். எனினும் அவர்கள் 16ஆம் திகதி மீண்டும் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் நான்கு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

மூன்று பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்தனர்.என்னையும் எனது குடும்பத்தையும்  மிரட்டும் வகையில் அவர்களது விசாரணை அமைந்திருந்தது.குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்று அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவு போன்று காட்டிக் கொண்டாலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கின்றது.அக்டோபர் மாதம் 10ஆம் திகதி டெல்லியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் நான் கலந்து கொண்டமை தொடர்பாக விசாரித்தார்கள்.

ஜனநாயக போராளிகள் கட்சிக்கு  இந்தியா எவ்வாறன ஆலோசனைகளை வழங்குகின்றது. இந்தியா பணம் வழங்குகின்றதா? போன்றவற்றை அவர்கள் விசாரணைகளின் போது கேட்டிருந்தார்கள்.இந்தியா இலங்கையில் என்ன செய்யுமாறு தங்களை பணித்துள்ளார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டார்கள் எனவும் னநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments